அதிபர் டிரம்பின் பிறப்பால் குடியுரிமை ரத்து உத்தரவிற்கு இடைக்காலத் தடை: அமெரிக்க நீதிமன்றம்
அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த `பிறப்பால் குடியுரிமை’ நடைமுறையை, ரத்து செய்த அதிபர் டிரம்ப்பின் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த ஜன.20-ல் அமெரிக்காவின் 47-வது அதிபராகப் பதவியேற்றார் டொனால்ட் டிரம்ப். பதவியேற்ற கையோடு, அதுவரை அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த `பிறப்பால் குடியுரிமை’ நடைமுறையை, ரத்து செய்யும் உத்தரவில் அவர் கையெழுத்திட்டார்.
அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளின் பெற்றோரில் யாராவது ஒருவருக்கு அமெரிக்க குடியுரிமை இருந்தால் மட்டுமே, அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், 30 நாட்களுக்குள் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
டிரம்பின் இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வழக்கு தொடரப்பட்டது. குறிப்பாக, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 22 மாகாண அரசுகள் டிரம்ப் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தன. இந்நிலையில், டிரம்ப் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட ஒரு வழக்கின் விசாரணை சியாட்டல் ஃபெடரல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த சியாட்டல் நீதிபதி ஜான் கோகினோர், `டிரம்பின் உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது’ என்று கூறி அதற்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தார். இதனை அடுத்து டிரம்பின் உத்தரவு அமலாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சியாட்டல் நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்போவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.