அணு சக்தி நிலையங்களில் பலத்த சேதம்: முதன்முறையாக ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகெய் அல்ஜஸீராவுக்குப் பேட்டியளித்துள்ளார்.
அணு சக்தி நிலையங்களில் பலத்த சேதம்: முதன்முறையாக ஒப்புக்கொண்ட ஈரான்!
1 min read

அமெரிக்கா நடத்திய தாக்குதலால் அணு சக்தி நிலையங்கள் பலத்த சேதத்தைக் கண்டிருப்பதாக ஈரான் முதன்முறையாக வெளிப்படையாகப் பேசியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஜூன் 2-வது வாரத்திலிருந்து சண்டை நடந்து வந்தது. ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விலகியிருந்தார்.

ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்பது இஸ்ரேலின் நிலைப்பாடு. இதனால், இஸ்ரேலின் இலக்குகளில் அணு சக்தி நிலையங்கள் முக்கிய இலக்காக இருந்தன.

இந்தச் சண்டைக்கு மத்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரானிலுள்ள ஃபார்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்ஃபஹான் ஆகிய 3 அணு சக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தியதாக டிரம்ப் அறிவித்தார். விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. 1979-ல் ஈரானியப் புரட்சிக்குப் பிறகு ஈரானில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது இதுவே முதன்முறை.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரான் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தாலும், தாக்குதல் குறித்து ஈரான் முதன்முதலாக வெளிப்படையான கருத்தைத் தெரிவித்துள்ளது. அணு சக்தி நிலையங்கள் பலத்த சேதத்தைச் சந்தித்திருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகெய் அல்ஜஸீராவுக்குப் பேட்டியளித்துள்ளார். இருந்தபோதிலும், தாக்குதலின் வீரியம் பற்றி அவர் மேற்கொண்டு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஈரானின் அணு சக்தித் திட்டத்தை அமெரிக்காவின் தாக்குதல் அழித்துவிட்டதாக டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வந்தார். இதை உறுதிப்படுத்தும் வகையில் ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளரின் கருத்து அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in