ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா ஈரானில் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் அங்கு அமெரிக்க மத்திய மண்டல ராணுவத் தளபதி மைக்கேல் எரிக் குரில்லா வருகை தந்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
மத்திய தரைகடலை ஒட்டியிருக்கும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை ஏறத்தாழ கடந்த 18 வருடங்களாக நிர்வகித்து வருகிறது ஹமாஸ் தீவிரவாத அமைப்பு. இதன் தலைவர் இஸ்மாயில் ஹனியா கடந்த ஜூலை 31-ல் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். ஹனியாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட ஈரானின் உயர் தலைவர் அலி காமனேய், ஹனியா சிந்திய ரத்தத்துக்குத் பழிவாங்குவோம் என்று சூளுரைத்தார்.
இதை அடுத்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும், நாளை (ஆகஸ்ட் 5) தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் மத்திய மண்டல ராணுவத் தளபதி மைக்கேல் குரில்லா, மத்திய கிழக்குப் பகுதிக்கு வருகை தந்துள்ளார். இந்தப் பயணத்தில் இஸ்ரேல், ஜோர்டான் உள்ளிட்ட அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு அவர் செல்ல இருக்கிறார். ஒரு வேளை ஈரான் தாக்குதல் நடத்தினால் அதை சமாளிப்பது குறித்து அந்நாடுகளுடன் அவர் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
ஓமன் நாட்டை ஒட்டிய கடல் பகுதியில் ஏற்கனவே யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் உள்ளிட்ட அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நேற்று யுஎஸ்எஸ் அபிரஹாம் லிங்கன் போர்க்கப்பலை ஓமன் பகுதிக்குச் செல்லுமாறு அந்நாட்டு ராணுவத் தலைமையகம் உத்தவிடப்பட்டுள்ளது.
மேலும் லெபனானில் இருந்தபடி ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு இன்று (ஆகஸ்ட் 4) காலை இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதை இஸ்ரேல் முறியடித்திருந்தாலும், அங்கு நிலவு வரும் பதற்றமான சூழ்நிலை மேலும் அதிகரித்துள்ளது.