ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு: இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? | Iran | USA |

ஈரானுக்கு இந்தியாவில் இருந்து பாசுமதி அரிசி, தேநீர், மின்சாதனப் பொருள்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்படுகிறது...
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு: இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு: இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
1 min read

ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளுக்குக் கூடுதலாக 25% வரி விதிக்கப்பட்ட அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானில் அரசுக்கும் மத தலைவர் அயத்துல்லா அலி காமேனிக்கும் எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. அவற்றைக் கட்டுக்குள் கொண்டு வரப் பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இதுவரை 2,500-க்கும் மேற்பட்டோர் இந்தக் கலவரத்தில் உயிரிழந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மறுபுறம் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

25% கூடுதல் வரி விதிப்பு

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு கூடுதலாக 25% வரி விதிக்கப்படுவதாக அறிவித்தார். இது தொடர்பாக தனது ட்ரூத் சமூக ஊடகப் பக்கத்தில் அவர் கூறியதாவது:-

“உடனடியாக அமலுக்கு வரும் வகையில், ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாடும், அமெரிக்காவுடன் செய்யப்படும் அனைத்து வணிகத்திற்கும் 25% வரியை செலுத்தும். இந்த உத்தரவு இறுதியானது மற்றும் முடிவானது.” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

இதையடுத்து அமெரிக்காவின் புதிய கூடுதல் வரி விதிப்பு இந்தியாவுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஈரானுக்கு இந்தியாவில் இருந்து பாசுமதி அரிசி, தேநீர், சர்க்கரை, மருந்துகள், நகைகள், மின் சாதனப் பொருள்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஈரானிலிருந்து உலர் பழங்கள், ரசாயங்கள் இறக்குமதி ஆகின்றன. ஆனால், ஈரானுடன் இந்தியா மேற்கொண்டுள்ள வர்த்தகம், நம் நாட்டின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் வெறும் 0.15% தான் என்று கடந்த ஆண்டு தரவுகள் கூறுகின்றன. இது வரும் நிதியாண்டில் மேலும் குறைவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது. கடந்த ஆண்டு ஈரானின் ஒட்டுமொத்த இறக்குமதியின் அளவு ரூ. 6.13 லட்சம் கோடியாக உள்ளது. இதில் ஐக்கிய அமீரகம், சீனா, துருக்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்கு அதிகம். இந்தியாவின் பங்கு வெறும் ரூ. 10,800 கோடி மட்டுமே. இதனால் அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு இந்தியாவுக்கு குறைவான பாதிப்பையே உருவாக்கும் என்று கருதப்படுகிறது.

ஏற்கெனவே ரஷ்ய கச்சா எண்ணெய் விவகாரம் காரணமாக அமெரிக்கா இந்திய பொருள்களுக்கு 50% வரி விதித்துள்ளது. இந்தச் சூழலில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் வரி விதிப்பு மேலும் குழப்பமான சூழலை உருவாக்கி உள்ளது. ஆனால் வெள்ளை மாளிகையிலிருந்து இந்தப் புதிய வரிவிதிப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்று அல் ஜசீரா இணைய செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

Summary

US President Donald Trump has announced that an additional 25% tariff on countries doing business with Iran will take effect immediately.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in