
கடந்த ஜூலை 18-ல் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் உர்சுலா வான் டெர் லேயன். இதன் மூலம் மீண்டும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைமைப் பதவியை ஐந்தாண்டுகள் வகிக்க உள்ளார் உர்சுலா.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் 720 இடங்களுக்கான தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து புதிதாகத் தேர்வாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐரோப்பிய ஆணையத்தின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க நேற்று (ஜூலை 18) கூடினார்கள்.
கடந்த 2019 முதல் 2024 வரை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராகப் பதவி வகித்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த உர்சுலா வான் டெர் லேயன், மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். ரகசிய வாக்கெடுப்பின் முடிவில் உர்சுலாவுக்கு 401 வாக்குகள் கிடைத்ததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வெற்றி பெற்றதை அடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தவும், தொழில்துறையை வலுப்படுத்தவும், வீட்டுவசதி நெருக்கடியை சமாளிக்கவும் உறுதியளித்தார் உர்சுலா. இந்தப் பதவிக்காலத்தில் உக்ரைன் போர், சீனாவுடனான வர்த்தகப் பிரச்சனை போன்ற முக்கிய சவால்களை எதிர்கொள்ள உள்ளார் உர்சுலா.
2019-ல் ஐரோப்பிய ஆணையத்தின் முதல் பெண் தலைவராகப் பொறுப்பேற்ற உர்சுலா, ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்கல் அமைச்சரவையில் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக 2013 முதல் 2019 வரை பதவி வகித்துள்ளார்.