
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு இந்தியாவுடன் ஒத்துழைக்க பாகிஸ்தானுக்கு இன்னமும் விருப்பம் உள்ளது என்று, பாகிஸ்தான் பிரதிநிதிகள் குழுவின் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் பூட்டோ ஐநா சபையில் வைத்துப் பேசியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து இந்திய தரப்பின் நிலைப்பாட்டை விவரிக்க காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான இந்தியாவின் அனைத்துக் கட்சிக் குழு அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யை வந்தடைந்த அதே நாளில், பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் குழுவும் தங்கள் தரப்பின் நியாயத்தை எடுத்துரைக்க அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு வந்துள்ளது.
நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற செய்தியாளர்கள் சந்திப்பில் பிலாவல் பூட்டோ பேசியதாவது,
`பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பாகிஸ்தான் இன்னமும் இந்தியாவுடன் ஒத்துழைக்க விரும்புகிறது. அதுதான் அமைதிக்கான ஒரே சாத்தியமான வழி. 1.5 பில்லியன் மற்றும் 1.7 பில்லியன் மக்களின் தலைவிதியை அரசு சாராதவர்கள் மற்றும் பயங்கரவாதிகளின் கைகளில் விட்டுவிட முடியாது.
(பாகிஸ்தான் உளவு அமைப்பு) ஐ,எஸ்.ஐ. மற்றும் (இந்திய உளவு அமைப்பு) ரா ஆகியவை அமர்ந்து பேசி பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடத் தயாராக இருந்தால், இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பயங்கரவாதம் கணிசமாகக் குறைவதைக் காணலாம் என்று நான் முழுமையாக நம்புகிறேன்’ என்றார்.
ஆபரேஷன் சிந்தூரின் நடவடிக்கையின்போது இந்தியாவால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் இத்தகைய சூழ்நிலையால் அந்நாடு அமைதியைத் தேட வேண்டிய அவசியம் ஆகியவற்றை பூட்டோவின் தற்போதைய சமாதான நிலைப்பாடு வெளிப்படுத்துவதாக ஏ.என்.ஐ. செய்தியில் கூறப்பட்டுள்ளது.