பாதுகாப்பு கவுன்சில் அமைப்பில் மறுசீரமைப்பு தேவை: ஐநா பொதுச்செயலாளர்

பாதுகாப்பு கவுன்சில் அமைப்பில் மறுசீரமைப்பு தேவை: ஐநா பொதுச்செயலாளர்

உலகத்தின் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் இடத்தில் உள்ள அமைப்பில், ஆஃப்ரிக்காவுக்கு நிரந்தரக் குரல் இல்லாததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை
Published on

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ், ஐநா சபையின் உச்சபட்ட அதிகாரம் பொருந்திய பாதுகாப்பு கவுன்சில் அமைப்பில் ஆஃப்ரிக்காவுக்கு நிரந்தர இடம் தேவை என்று கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று (ஆகஸ்ட் 12) நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஐநா பொதுச் செயலாளர் குட்டரெஸ், `உலகத்தில் நடந்துகொண்டிருக்கும் மாற்றங்களுக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஈடுகொடுக்கவில்லை’ என்றார்.

`உலகத்தின் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் இடத்தில் உள்ள அமைப்பில், நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட ஆஃப்ரிக்காவுக்கு நிரந்தரக் குரல் இல்லாததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது போல உலகத்தின் அமைதி, பாதுகாப்பு தொடர்பான கேள்விகளில் ஆஃப்ரிக்காவின் கருத்துகளை குறைத்து மதிப்பிடுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று பேசியுள்ளார் குட்டரெஸ்.

ஐக்கிய நாடுகள் சபையின் உச்சபட்ட அதிகாரம் பொருந்திய அமைப்பு அதன் பாதுகாப்பு கவுன்சில் ஆகும். இதில் 15 உறுப்பு நாடுகள் உள்ளன. இந்த 15 உறுப்பு நாடுகளில் 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாகவும், 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாகவும் உள்ளன.

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, ஃபிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. 10 தற்காலிக இடங்களுக்கு இரண்டு வருடங்கள் பதவிக்காலத்தில் வெவ்வேறு நாடுகள் தேர்தெடுக்கப்படும். பாதுகாப்பு கவுன்சில் எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் அனைத்து நிரந்தர உறுப்பு நாடுகளின் ஆதரவு அவசியம். ஒரு நிரந்தர உறுப்பு நாடு எதிர்த்து வாக்களித்தாலும் பாதுகாப்பு கவுன்சிலால் அதன் முடிவுகளை செயல்படுத்த முடியாது.

நாடுகளுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிப்பது, ஒரு அமைப்பைத் தீவிரவாத இயக்கமாக அறிவிப்பது, பிரச்னைக்குரிய நாடுகளுக்கு அமைதியை நிலைநாட்டும் படைகளை அனுப்புவது என்று உலகத்தின் பாதுகாப்புக்கு பாதுகாப்பு கவுன்சில் எடுக்கும் முடிவுகள் மிகவும் அவசியமானது.

மிக நீண்ட காலமாக பாதுகாப்பு கவுன்சிலில் மறுசீரமைப்பு தேவை எனவும், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் அளிக்கவேண்டும் எனவும் உலகளவில் அவ்வப்போது கருத்துகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

logo
Kizhakku News
kizhakkunews.in