
பாலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தில் பஞ்சம் நிலவுவதாக அதிகாரப்பூர்வமாக ஐக்கிய நாடுகள் சபை இன்று (ஆக. 22) அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் இவ்வாறு அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறை, சுமார் 5,00,000-க்கும் மேற்பட்ட மக்கள் பட்டினியால் `பேரழிவை’ எதிர்கொள்வதாக ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் இந்த பஞ்சம் முற்றிலும் தடுக்கக்கூடியது என்று ஐ.நா. உதவி அமைப்பின் தலைவர் டாம் பிளெட்சர் கூறினார். `இஸ்ரேலின் திட்டமிட்ட தடைகள் காரணமாக உணவை காஸா பகுதிக்குள் எடுத்துச் செல்ல முடியவில்லை’ என்றார்.
இந்த அறிவிப்பிற்கு உடனடியாக பதிலளித்த இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் `காஸாவில் பஞ்சம் இல்லை’ என்று கூறியது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில், `ஹமாஸின் பொய்களை அடிப்படையாகக்கொண்டு, குறிப்பிட்ட நோக்கத்தை உடைய அமைப்புகள் மூலம் இது பரப்பப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏறத்தாழ இரு ஆண்டுகளாக இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் பாலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தில், நாளுக்கு நாள் மனிதாபிமான நிலைமை மோசமடைந்து வருவதாக பல மாதங்களாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்து வருகிறது.
`ஆகஸ்ட் 15, 2025 நிலவரப்படி, காஸா பகுதியில் சுமார் 20 சதவீதத்தை உள்ளடக்கிய காஸா மாகாணத்தில் பஞ்சம் (கட்டம் 5) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக’ ஐபிசி (உணவுப் பாதுகாப்பு குறித்து ஆராயும் ஐநாவின் ஒரு பிரிவு) இன்று (ஆக. 22) வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
`22 மாத இடைவிடாத மோதலுக்குப் பிறகு, காஸா பகுதியில் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பட்டினி, வறுமை மற்றும் இறப்பு போன்ற பேரழிவு நிலைமைகளை எதிர்கொள்கின்றனர்’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, செப்டம்பர் மாத இறுதிக்குள் டெய்ர் எல்-பலா மற்றும் கான் யூனிஸ் மாகாணங்களுக்கு பஞ்சம் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது காஸா பிராந்தியத்தின் மூன்றில் இரண்டு பங்கை உள்ளடக்கும்.