உக்ரைனின் புதிய பெண் பிரதமர்: யார் இந்த யூலியா ஸ்வேர்டென்கோ? | Ukraine | PM

உக்ரைனின் போர்க்கால பொருளாதார கொள்கையை வகுப்பதிலும், அதை நடைமுறைப்படுத்துவதிலும் யூலியா முக்கியப் பங்காற்றினார்.
யூலியா ஸ்வேர்டென்கோ
யூலியா ஸ்வேர்டென்கோhttps://x.com/Svyrydenko_Y
1 min read

ரஷ்யாவுடன் போர் நிறுத்தத்திற்கான வாய்ப்புகள் குறைந்து வருவதால், போர் நடவடிக்கைக்கு புத்துணர்வு அளிக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் 2-வது பெண் பிரதமராக யூலியா ஸ்வேர்டென்கோ என்பவரை உக்ரைன் நாடாளுமன்றம் கடந்த ஜூலை 17-ல் தேர்வு செய்தது.

மூன்றாண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவுடன் போரில் சிக்கியுள்ள உக்ரைன் நாட்டில், ஆயுத உற்பத்தியை அதிகரிப்பதற்கும், கடன் சார்ந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியை புதிய பிரதமரிடம் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒப்படைத்துள்ளதாக ராய்டர்ஸ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

25 டிசம்பர் 1985-ல் அன்றைய சோவித் யூனியனின் உக்ரைனில் பிறந்த யூலியா ஸ்வேர்டென்கோ, 2008-ல் கீவ் தேசிய வர்த்தக மற்றும் பொருளாதார பல்கலைக்கழகத்தில் ஏகபோக எதிர்ப்பு மேலாண்மையில் பட்டம் பெற்றார். 2015-ல் அவரது பூர்வீகமான செர்னிஹிவ் மாகாணத்தின் பொருளாதார மேம்பாட்டுத் துறையின் தலைவராகப் பொறுப்பேற்று, பொது நிர்வாகப் பணியில் நுழைந்தார்.

இதைத் தொடர்ந்து 2018-ல் செர்னிஹிவ் மாகாணத்தின் பொறுப்பு ஆளுநராகவும், அதன்பிறகு நவம்பர் 4, 2021 முதல் உக்ரைனின் துணைப் பிரதமராகவும் பொருளாதார மேம்பாடு மற்றும் வர்த்தக அமைச்சராகவும் ஸ்வேர்டென்கோ பணியாற்றி வந்தார்.

குறிப்பாக, உக்ரைனின் போர்க்கால பொருளாதார கொள்கையை வகுப்பதிலும், அதை நடைமுறைப்படுத்துவதிலும் அவர் முக்கியப் பங்காற்றினார். இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் ஆதரவுடன், புதிய பிரதமராக யூலியா தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆயுத உற்பத்தி, நிதி சீர்திருத்தம் மற்றும் பொருளாதார நவீனமயமாக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையிலான போர்க்கால நடவடிக்கைகளை செயல்படுத்தும் பணியில் அவர் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம் அண்மையில் பதவியை ராஜினாமா செய்த பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால், புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in