ஐரோப்பிய தலைவர்களுடன் ஜெலென்ஸ்கி
ஐரோப்பிய தலைவர்களுடன் ஜெலென்ஸ்கிANI

அமைதிப் பேச்சுவார்த்தையில் உக்ரைனும் இடம்பெற வேண்டும்: ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தல் | European Union | Ukraine

உக்ரைனின் பங்களிப்பு இல்லாத எந்தவொரு ஒப்பந்தமும் `உயிரற்ற முடிவுகளுக்கு சமம்’ என்று முன்னதாக அதிபர் ஜெலென்ஸ்கி கூறியிருந்தார்.
Published on

ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக மீண்டும் ஒரு முறை வலிமையான குரலை எழுப்பியுள்ளன. போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யாவுடனான எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தையிலும் உக்ரைனும் இடம்பெறவேண்டும் என்று அவை வலியுறுத்தியுள்ளன.

அமெரிக்க மாகாணமான அலாஸ்காவில் வரும் ஆக 15 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து உக்ரைனில் நடைபெற்று வரும் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். இந்நிலையில் இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, போலந்து, பின்லாந்து மற்றும் ஐரோப்பிய ஆணையம் கூட்டாக இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் பங்கேற்கும் வகையில் முத்தரப்பு சந்திப்பை நடத்த டிரம்ப் தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதை முன்வைத்தே புதின் மற்றும் ஜெலென்ஸ்கி இருவருடனும் முத்தரப்பு சந்திப்பை ஏற்பாடு செய்ய `எங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது’ என்று நம்புவதாக அமெரிக்க அதிபர் கூறினார்.

ஆனால் தற்போதைக்கு, ரஷ்ய அதிபர் ஆரம்பத்தில் கோரியபடி, அது டிரம்ப்-புடின் மட்டுமே பங்கேற்கும் உச்சிமாநாடாக இருக்கும் என்று கூறப்படுகிறது. முத்தரப்பு சந்திப்பு நடத்த புதின் சம்மதிக்காததே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பல வாய்ப்புகளை அவர் மறுத்துவிட்டார்.

குறிப்பாக, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் மீது முழு அளவிலான ரஷ்ய படையெடுப்பை புதின் தொடங்கியதில் இருந்து இரு தலைவர்களும் இதுவரை நேருக்கு நேர் சந்திக்கவில்லை.

உக்ரைனின் பங்களிப்பு இல்லாத எந்தவொரு ஒப்பந்தமும் `உயிரற்ற முடிவுகளுக்கு சமம்’ என்று முன்னதாக அதிபர் ஜெலென்ஸ்கி கூறியிருந்தார்.

கடந்த ஆக. 8 அன்று பேசிய டிரம்ப் ரஷ்யாவும், உக்ரைனும் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்காக `சில பிரதேசங்களை மாற்றிக்கொள்ளும்’ என்று கூறினார் – இதற்கு அதிபர் ஜெலென்ஸ்கி கடுமையாக எதிர்வினை ஆற்றினார்.

logo
Kizhakku News
kizhakkunews.in