
உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனுடனான போர் தொடங்கி 1,000 நாள்களைக் கடந்த நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்துவது இதுவே முதன்முறை.
அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்துவதற்கான புதிய கொள்கையில் அந்த நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் அண்மை கையெழுத்திட்டார். இதுகுறித்த இறுதி முடிவை புதின் எடுக்கும் வகையில் புதிய அணு ஆயுதக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கொள்கையால் தொடக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அணு ஆயுதத் தாக்குதல் என்றால், அது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுத்துவிடும்.
அதேசமயம், மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், அவர்களைப் பின்வாங்கச் செய்யவே ரஷ்யா இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.
இந்தச் சூழலில் முதன்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. எனினும், இந்தத் தாக்குதல் அணு ஆயுதத் தாக்குதல் அல்ல.
ரஷிய கூட்டமைப்பின் அஸ்த்ராகான் பிராந்தியத்திலிருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. உக்ரைன் விமானப் படை இதை உறுதிபடுத்தியுள்ளது. உக்ரைனில் நிப்ரோ என்ற இடத்தில் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை தாக்குதல் தொடர்பாக ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமிட்ரி பெஸ்கோவ் கேட்கப்பட்டது. இதுகுறித்து பேச எதுவும் இல்லை என்று திமிட்ரி பெஸ்கோவ் பதிலளித்தார்.
கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணையானது 5,500 கி.மீ.-க்கும் மேற்பட்ட தூரத்தைக் கடந்து தாக்குதல் நடத்தும். ரஷ்யா பயன்படுத்திய ஏவுகணையின் வகை ஆர்எஸ்-26 ருபேஸ் ஏவுகணை என்று கணிக்கப்படுகிறது.
மேற்கத்திய நாடுகளின் தொலைதூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையை உக்ரைன் பயன்படுத்தினால், அது பதற்றத்தை அதிகரிக்கக்கூடும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்திருந்தது.