
நாட்டின் ஜனநாயக அமைப்பில் மிகப்பெரிய அளவிலான மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில், 16 மற்றும் 17 வயதுடையவர்களுக்கு அனைத்து தேர்தல்களிலும் வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கான திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக பிரிட்டன் அரசாங்கம் இன்று (ஜூலை 17) தகவல் தெரிவித்துள்ளது.
புதிதாக முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் ஜனநாயகத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்றும், ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் ஏற்கனவே இளைய வாக்காளர்கள் தேர்தல்களில் பங்கேற்கும் நிலையில் இந்த நடவடிக்கை பிரிட்டன் முழுவதும் இளையோருக்கான வாக்களிக்கும் உரிமைகளை பரவலாக்கும் என்றும், பிரிட்டன் அரசாங்கம் கூறியுள்ளது.
இது தொடர்பாக ஐடிவி ஊடகத்திடம் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறியதாவது,
`அவர்கள் வேலைக்குச் செல்லும் வயதை எட்டிவிட்டனர், வரி செலுத்தும் வயதை எட்டிவிட்டனர். நீங்கள் வரி செலுத்தினால், உங்கள் பணத்தை எதற்காக செலவிடவேண்டும் என்பதை சொல்லவும், அரசாங்கம் எந்த வழியில் செல்லவேண்டும் என்பதை சொல்லவும், உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன்’ என்றார்.
பிரிட்டன் அரசாங்கம் முன்மொழிந்துள்ள இந்த முடிவை செயல்படுத்த நாடாளுமன்ற ஒப்புதல் தேவைப்படும், ஆனால் அது ஒரு தடையாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இந்த கொள்கை கடந்தாண்டு நடைபெற்ற ஸ்டார்மரின் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அது அவர் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்குப் பெரும்பான்மையை வழங்கியது.
இந்த முன்மொழிவிற்கு தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த லண்டன் மாநகர மேயர் சாதிக் கான் ஆதரவு தெரிவித்துள்ளார். `நீண்ட காலமாக காத்திருப்பில் இருந்த நடவடிக்கை, தங்கள் எதிர்காலம் குறித்த விவகாரங்களில் அதிக பங்களிப்பை வழங்க இளைஞர்கள் தகுதியானவர்கள்’ என்றார்.
கியூபா, ஆர்ஜென்டினா, பிரேசில், ஈக்வடார், கிரீஸ், ஆஸ்திரியா இந்தொனேசியா போன்ற நாடுகளில் 16 அல்லது 17 வயதுடையவர்கள் வாக்களிக்கும் நடைமுறை அமலில் உள்ளது.