
சொத்து அல்லது வணிகத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்யாமல், இனி புதிய நடைமுறையின் கீழ் ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா நடைமுறைக்கு விண்ணப்பிக்கலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த 2019-ல் செல்வந்தர்கள் மற்றும் தொழிலதிபர்களைக் குறிவைத்து கோல்டன் விசா திட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம் முதல்முறையாக அறிமுகப்படுத்தியது.
கோல்டன் விசா திட்டத்தின் கீழ் அந்நாட்டில் வணிகம் அல்லது சொத்துகளில் 22 மில்லியன் யுஏஇ திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4.66 கோடி) முதலீடு செய்யும் நபர்களுக்கு, 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் விசா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம், அந்நாட்டின் தொழில்துறை கட்டமைப்பை வலுப்படுத்த யுஏஇ அரசு திட்டமிட்டது. கோல்டன் விசா நடைமுறையை இந்தியர்கள் மத்தியில் பிரபலமாக்கும் வகையில் ரஜினிகாந்த், ஷாருக்கான், மம்மூட்டி, மோகன்லால், ரன்வீர் சிங், மௌனி உள்ளிட்ட ஆகிய இந்திய திரைத்துறையினருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது.
இந்நிலையில், கோல்டன் விசா திட்டத்தில் தற்போது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, 1 லட்சம் யுஏஇ திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ. 23 லட்சம்) செலுத்தினால், ஐக்கிய அரபு அமீரத்திற்கு செல்ல (வாழ்நாள்) கோல்டன் விசா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை அடிப்படையில் இந்தியர்கள் மற்றும் வங்கதேசத்தவர்கள் மத்திய நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த புதிய திட்டத்தின் கீழ் விசா கோரி விண்ணப்பிக்கும் நபர்களின் பின்னணி குறித்து, குறிப்பாக குற்றவியல் மற்றும் நிதி பின்னணிகள் குறித்து விரிவாக விசாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும், சம்மந்தப்பட்ட நபர்களின் சமூக ஊடக கணக்குகளும் விரிவாக ஆராயப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.