புகழ்பெற்ற சமையலறை பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான அமெரிக்காவைச் சேர்ந்த டப்பர்வேர் கடந்த செப்.17-ல் திவால் நோட்டீஸ் அளித்துள்ளது.
கடந்த 1946-ல் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட டப்பர்வேர் நிறுவனம் 90-களில் உலகளவில் சமையலறை சம்மந்தமான பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமாக உருவானது. அமெரிக்காவைத் தாண்டி ஆசியா, ஐரோப்பா உள்ளிட்ட கண்டங்களிலும் டப்பர்வேர் பொருட்களின் விற்பனை அதிகரித்தது. குறிப்பாக இந்தியா, இந்தொனேசியா போன்ற நாடுகளில் டப்பர்வேரின் தயாரிப்புகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.
ஆனால் கோவிட் பெருந்தொற்று காலத்தில் டப்பர்வேர் நிறுவனத் தயாரிப்புகளின் விற்பனை கடுமையாகச் சரிந்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள உற்பத்தி மையத்தை மூடிவிட்டு, மெக்ஸிகோ நாட்டில் உற்பத்தி மையம் தொடங்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் அறிவித்தது டப்பர்வேர் நிர்வாகம்.
மேலும் கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு டப்பர்வேர் தயாரிப்புகளின் விற்பனை அதிகரிக்காத காரணத்தால், அமெரிக்க திவால் சட்டத்தின் கீழ் கடந்த செப்.16-ல் திவால் நோட்டீஸ் அளித்தது டப்பர்வேர் நிர்வாகம். இதை அடுத்து அமெரிக்க பங்குச்சந்தையில் டப்பர்வேர் நிறுவனத்தின் பங்குகள் கடுமையாகச் சரிந்தன.
உலகளவில் டப்பர்வேர் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்னையால் இந்நிறுவனத்தின் இந்தியத் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 28 வருடங்களாக இந்தியாவில் வியாபாரம் மேற்கொண்டு வரும் டப்பர்வேர் நிறுவனம் சமீபத்தில் கண்ணாடி, ஸ்டீல் உள்ளிட்ட பொருட்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக டப்பர்வேர் நிறுவனத்தின் வினியோகஸ்தர் ஒருவர், எகனாமிக் டைம்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், `இந்தியாவில் விழாக்காலங்களின்போது டப்பர்வேர் நிறுவனத் தயாரிப்புகளின் விற்பனை பல மடங்கு அதிகரித்தே வந்துள்ளது. இதற்கான பாதிப்பு இந்தியாவில் பெரிதாக இருக்காது’ என்றார்.