ஜப்பானைச் சேர்ந்தவர் ரியோ டட்சுகி. இவரைப் புதிய பாபா வங்கா என்று அழைப்பார்கள்.
சரி, பாபா வங்கா என்பவர் யார்?
பாபா வங்கா என்பவர் பல்கேரியாவைச் சேர்ந்தவர். குழந்தைப் பருவத்திலேயே பார்வை திறனை இழந்தவர். இவர் 1996-ல் உயிரிழந்துவிட்டார். இவர் எதிர்காலத்தில் நிகழக்கூடிய சம்பவங்களைக் கணிக்கக்கூடியவர். உலகில் நிகழப்போகும் சம்பவங்களை முன்கூட்டியே இவர் கணித்ததை, இவருடைய ஆதரவாளர்கள்/பின்தொடர்பவர்கள் பதிவு செய்துகொண்டு, பாபா வங்காவின் மறைவுக்குப் பிறகு பொதுவெளியில் வெளியிட்டார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட கணிப்புகளைச் செய்திருந்தாலும், இவருடைய கணிப்பு எதுவும் எழுத்துபூர்வமாக எதிலும் குறிப்பிடப்படவில்லை. பாபா வங்காவின் கணிப்புகள் எனச் சொல்லப்படும் அனைத்தும் இவருடைய மறைவுக்குப் பிறகே வெளியிடப்பட்டவை.
இவர் செப்டம்பர் 11, 2001-ல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டதை முன்பே கணித்திருந்தார். 2013-14-ல் ஐஎஸ்ஐஎஸ்-ன் எழுச்சி, அமெரிக்காவின் 44-வது அதிபர் ஆப்பிரிக்க-அமெரிக்கராக இருப்பார் எனப் பல்வேறு நிகழ்வுகளை முன்பே கணித்திருக்கிறார். எனவே, இவர் உலகம் முழுக்கப் பிரபலமடைந்தார்.
ஜப்பானின் பாபா வங்கா யார்?
பாபா வங்காவைப் போலவே எதிர்காலத்தில் நிகழக்கூடியதை முன்பே கணிப்பதில் பிரபலமடைந்தவர் ரியோ டட்சுகி. இவரைப் புதிய பாபா வங்கா அல்லது ஜப்பானின் பாபா வங்கா என்று அழைப்பார்கள். இவர் 1999-ல் வெளியிட்ட கணிப்புகள் பிரபலமானவை. பாபா வங்காவைப் போலவே இவருடைய கணிப்புகளுக்கும் அறிவியல்பூர்வ ஆதாரம் இல்லாதபோதிலும், மார்ச் 2011 சுனாமியைக் கணித்ததால், இவர் பெரிதளவில் பேசப்பட்டார். ஜப்பானில் 2011-ல் சுனாமி தாக்கப்பட்டதில் 18 ஆயிரம் பேர் உயிரிழந்தார்கள். இதுமட்டுமின்றி கொரோனா தொற்றையும் முன்பே கணித்திருக்கிறார்.
1999-ல் வெளியிட்ட கணிப்புகளைப் புதுப்பிக்கும் வகையில் 2021-ல் மீண்டும் கணிப்புகளை வெளியிட்டார் ரியோ டட்சுகி. இதில் ஜப்பானில் ஜூலை 5 அன்று மிகப் பெரிய அளவில் பேரழிவு ஏற்படும் என அவர் கணித்துள்ளார். இதற்கு அறிவியல்பூர்வ ஆதாரங்கள் இல்லாதபோதிலும், இவருடைய முந்தையக் கணிப்புகளால் இதுவும் கவனம் பெறுகிறது. ஜூலை 5 நெருங்கி வருவதால், ரியோ டட்சுகியின் கணிப்பு காரணமாக சுற்றுலாப் பயணிகள் ஜப்பான் செல்வதைத் தவிர்த்து வருகிறார்கள். ரியோ டட்சுகியின் கணிப்பினால் எழுந்த அச்சம் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய பயணத் திட்டத்தை ரத்து செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலர் பயணத் திட்டத்தை ஒத்திவைத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
ஜப்பானுக்கான விமான முன்பதிவுகள் 83% சரிவைச் சந்தித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின்றன. கிழக்கு ஆசியாவிலிருந்து வருபவர்கள் பயணத்தை ரத்து செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
ரியோ டட்சுகியின் கணிப்புகளுக்கு அறிவியல் ஆதாரம் இல்லாததால், அதைக் கவனத்தில் கொள்ள வேண்டாம் என ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்து வருகிறார்கள். ஜப்பானைச் சேர்ந்தவர்கள் இந்தக் கணிப்புகளுக்கு அஞ்சி ஜப்பானைவிட்டு எங்கும் வெளியேறுவதில்லை என்ற கருத்துகளும் பரவி வருகின்றன.