
இரு பாலின அங்கீகாரம், மெக்ஸிகோ எல்லையில் அவசர நிலை பிரகடனம், பனாமா கால்வாய் மீட்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கேப்பிடல் கட்டடத்தின் உள் அரங்கில் நேற்று (ஜன.20) நடந்த விழாவில், அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்பும், 50-வது துணை அதிபராக ஜே.டி. வான்ஸும் பதவியேற்றுக்கொண்டனர். சுமார் 600 விருந்தினர்கள் பங்கேற்ற இந்த விழாவில் டிரம்ப் பேசியதாவது,
`அமெரிக்காவின் பொற்காலம் தற்போது தொடங்கியுள்ளது. இன்று முதல் உலக அரங்கில் நம் தேசத்திற்கான மரியாதை மீண்டும் நிலைநிறுத்தப்படும். டிரம்ப் நிர்வாகத்தின் ஆட்சியின்போது அமெரிக்கா முதன்மை நாடாக உருவாவதை நான் உறுதிசெய்வேன். நமது இறையாண்மை திரும்பப் பெறப்படும். நமது பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும்.
நீதியின் வரம்புகள் மறுசீரமைக்கப்படும். முன்பை விட ஒரு சிறந்த, வலிமையான மற்றும் விதிவிலக்கான நாடாக அமெரிக்கா மாறும். நாடு முழுவதும் மாற்றத்திற்கான அலை வீசுகிறது. இதை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குப் பயன்படுத்திக்கொள்ள அமெரிக்காவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
முதலில், நாம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும். அவை ஏராளமாக இருந்தாலும், தற்போது உலகம் பார்த்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவிலுள்ள மாபெரும் உந்துதலால் அவை அழிக்கப்படும். ஆண், பெண் என இரு பாலினங்கள் மட்டுமே உண்டு என்பது அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வக் கொள்கையாக இருக்கும்.
பன்முகத்தன்மை தொடர்பான அரசுத் திட்டங்கள் கைவிடப்படும். பனாமா கால்வாயை மீண்டும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அமெரிக்காவின் தெற்கு எல்லையில் (மெக்ஸிகோ) அவசர நிலை பிரகடனப்படுத்தப்படும். அமெரிக்கா மீண்டும் மதிக்கப்படும், போற்றப்படும்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் நாம் பலமாக இருப்போம், வெற்றி பெறுவோம். யாராலும் நம்மை ஆக்கிரமிக்க முடியாது. இன்று முதல் நாம் சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடாக இருப்போம். நமக்கு குறுக்கே எதுவும் இருக்க முடியாது, ஏனென்றால் எதிர்காலம் நம்முடையது. நமது பொற்காலம் தற்போது தொடங்கியுள்ளது’ என்றார்.
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் மற்றும் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2021 கேபிடல் கட்டடம் சூறையாடல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தன் ஆதரவாளர்கள் சுமார் 1,600 பேருக்குப் பொது மன்னிப்பு வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப்.