அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நோய் பாதிப்பு: வெள்ளை மாளிகை விளக்கம் | Donald Trump

நியூ ஜெர்சியில் நடந்த ஃபிபா கிளப் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தின்போது டிரம்பின் வீங்கிய கால்களை செய்தியாளர்கள் படம் பிடித்தனர்.
டிரம்ப் - கோப்புப்படம்
டிரம்ப் - கோப்புப்படம்Nathan Howard
1 min read

US President Donald Trump Diagnosed With Chronic Vein Condition: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கையில் காயங்கள் இருப்பது போன்று அண்மையில் வெளியான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பல்வேறு ஊகங்களை கிளப்பின. இந்நிலையில், 79 வயதான டிரம்ப் நாள்பட்ட நரம்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

அதிபரின் கணுக்காலில் `லேசான வீக்கம்’ இருப்பது தெரிந்த பின்னர் அது தொடர்பான பரிசோதனை மேற்கொண்டபோது, அவருக்கு Chronic Venous Insufficiency என்ற நரம்பு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தகவல் தெரிவித்துள்ளார்.

70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பொதுவாக காணப்படும் இந்த நோய் பாதிப்பு, நரம்புகளில் இருந்து இதயத்திற்கு ரத்த ஓட்டம் செல்வது தடைபடும்போது ஏற்படுகிறது.

டிரம்பின் காயமடைந்த கை குறித்து விளக்கிய லீவிட், அடிக்கடி கைகுலுக்குவதால் திசு சேதம் ஏற்பட்டதாகவும், ஆஸ்பிரின் பயன்படுத்துவதும் இதற்கு ஒரு காரணம் என்றும் கூறினார்.

மேலும், டிரம்ப் மருத்துவரின் அறிக்கையை படித்த லீவிட், ஆழமான நரம்பு இரத்த உறைவு, தமனி நோய், இதய செயலிழப்பு அல்லது சிறுநீரக பிரச்னை போன்ற கடுமையான நிலை அவருக்கு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதை அடிக்கோடிட்டார். அத்துடன் இந்த பாதிப்பு காரணமாக டிரம்பிற்கு எந்தவிதமான அசௌகரியமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

ஜூலை மாத தொடக்கத்தில், நியூ ஜெர்சியில் நடந்த ஃபிபா கிளப் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தின்போது டிரம்பின் வீங்கிய கால்களை செய்தியாளர்கள் படம் பிடித்தனர். வெள்ளை மாளிகையில் பஹ்ரைன் பிரதமருடனான சந்திப்பின்போது டிரம்பின் காயமடைந்த கைகள் புகைப்படங்களில் பதிவாகின.

`இதுவரை வாழ்ந்ததிலேயே மிகவும் ஆரோக்கியமான ஜனாதிபதி’ என்று கடந்த ஏப்ரல் மாதம் அதிபர் டிரம்ப் தன்னை வர்ணித்துக்கொண்ட நிலையில், அவருக்கு நரம்பு நோய் பாதிப்பு இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in