
அமெரிக்க அதிபர் இருப்பிடமான வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தை காரசாரமாக நடைபெற்று இறுதியில் அங்கிருந்து ஜெலென்ஸ்கி வெளியேற்றப்பட்ட நிகழ்வு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி 20-ல் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து, நேற்று டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வெள்ளை மாளிகைக்கு வருகை தந்தார் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி.
உக்ரைன் உடன் ரஷ்யா மேற்கொண்டு வரும் போரை நிறுத்துவது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தையின்போது சில முக்கிய உடன்பாடுகள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது அமெரிக்க துணை அதிபர் ஜெ.டி. வேன்ஸ் உள்ளிட்டோர் உடனிருந்தார்கள். பரஸ்பர கைகுலுக்களுடன் அமைதியான முறையில் இந்த பேச்சுவார்த்தை தொடங்கியது.
முதலில் பேசிய துணை அதிபர் வேன்ஸ், `எப்போதும் ராஜாங்கரீதியிலான அணுகுமுறையை கடைப்பிடிப்பதாலேயே நல்ல தேசமாக அமெரிக்கா அடையாளப்படுத்தப்படுகிறது. அதிபர் டிரம்ப் அதையே செய்கிறார். ஆனால் (முன்னாள் அதிபர்) ஜோ பைடனின் மோதல் போக்கு உக்ரைன் ரஷ்யப் போரை மேலும் தீவிரமடையச் செய்தது..’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட ஜெலென்ஸி, அவர் பேசியதன் அர்த்தம் குறித்துக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வேன்ஸ், `உங்கள் நாட்டிற்கு அழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் ராஜதந்திரத்தை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி பேசுகிறேன். ஓவல் அலுவலகத்துக்கு வந்து இவ்வாறு நீங்கள் பேசுவது அவமரியாதைக்குரிய செயல்’ என்றார்.
`போர் நடைபெறும்போது எல்லோருக்கும் பிரச்னைகள் ஏற்படும். ஆனால் உங்களுக்கு சாதகமான போக்கு இருப்பதால் அத்தகைய பிரச்னைகளை நீங்கள் எதிர்கொள்ளவில்லை. எதிர்காலத்தில் அவற்றை நீங்களும் எதிர்கொள்வீர்கள்’ என்றார் ஜெலென்ஸ்கி.
ஜெலென்ஸ்கியின் பதிலுக்கு ஆவேசமான தொனியில் குறுக்கிட்ட டிரம்ப், `நாங்கள் என்ன மாதிரியாக உணர்வோம் என்றெல்லாம் நீங்கள் எங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. உங்கள் பிரச்னைகளை களையவே முயற்சிசெய்கிறோம். லட்சக்கணக்கான மனித உயிர்களை வைத்து நீங்கள் சூதாடுகிறீர்கள். 3-ம் உலகப்போரை நடத்தும் வகையில் நீங்கள் சூதாடுகிறீர்கள்’ என்றார்.
இதைத் தொடர்ந்து, மீண்டும் வாக்குவாதம் தொடர்ந்தது. அதன்பிறகு ஜெலன்ஸ்கியுடனான பேச்சுவார்த்தையை பாதியிலேயே முடித்துக்கொண்டார் டிரம்ப்.
இதனால் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு ஜெலென்ஸ்கியும், உக்ரைன் குழுவினரும் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்.