உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்ளாவிட்டால், குண்டு வீசப்படும்: டிரம்ப் எச்சரிக்கை!

ரஷ்யாவின் தவறே அதற்குக் காரணம் என்பது தெரிய வந்தால், அந்நாட்டில் இருந்து ஏற்றுமதியாகும் எண்ணெய் மீது புதிய வரிகள் விதிக்கப்படும்.
உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்ளாவிட்டால், குண்டு வீசப்படும்: டிரம்ப் எச்சரிக்கை!
ANI
1 min read

அணுசக்தி தொடர்பான புதிய உடன்படிக்கைக்கு ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால், அந்நாடு மீது குண்டு வீச்சு நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த செய்தி நிறுவனமான என்.பி.சி.யின் செய்தியாளர் கிறிஸ்டென் வெல்கரிடம் தொலைபேசியில் உரையாடிய அதிபர் டிரம்ப், உக்ரைன் தொடர்பான ரஷ்ய அதிபர் புதினின் கருத்துகளைக் கேட்டு ஆத்திரமடைந்தாகக் கூறியுள்ளார்.

உக்ரைனுடனான போரில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு, அந்நாட்டுத் தலைமையில் மாற்றம் ஏற்படவேண்டும், அதாவது அதிபர் ஜெலென்ஸ்கியை மாற்றிவிட்டுப் புதிய அதிபர் பொறுப்பேற்கவேண்டும் என்று அண்மையில் புதின் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் அவரது இந்த கருத்தை டிரம்ப் வரவேற்கவில்லை.

`உக்ரைனில் நடைபெற்று வரும் போரை நிறுத்தும் வகையில், என்னாலும், ரஷ்யாவாலும் ஒப்பந்தம் மேற்கொள்ள முடியவில்லை என்றால், ரஷ்யாவின் தவறே அதற்குக் காரணம் என்பது தெரிய வந்தால், அந்நாட்டில் இருந்து ஏற்றுமதியாகும் எண்ணெய் மீது புதிய வரிகள் விதிக்கப்படும்’ என்று டிரம்ப் தொலைபேசியில் கூறியதாக வெல்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், அணுசக்தி தொடர்பான புதிய உடன்படிக்கையை மேற்கொள்ள ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால், அந்நாடு மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வெல்கரிடம் டிரம்ப் கூறியுள்ளார்.

`உடன்படிக்கையை மேற்கொள்ளாவிட்டால் குண்டு வீச்சு நடைபெறும், இதற்கு முன்பு அவர்கள் பார்த்திராததைப் போல குண்டு வீசப்படும்’ என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துப் பேசியுள்ளார்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைக் கட்டுப்படுத்தும் வகையில், அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா இருந்தபோது, 2015-ல் அந்நாட்டுடன் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், டிரம்ப் முதல்முறை அதிபரான பிறகு அந்த உடன்படிக்கையில் இருந்து அமெரிக்க வெளியேறியது.

ஈரான் மீது மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் புதிய உடன்படிக்கையை கையெழுத்திடவேண்டும் என்று அப்போது டிரம்ப் கூறினார். ஆனால் புதிய உடன்படிக்கை மேற்கொள்ளும் முயற்சி கைகூடவில்லை.

டிரம்ப் விடுத்த எச்சரிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான் அதிபர் மசூத் பெஸெஷ்கியான் உடன்படிக்கை மேற்கொள்ள அமெரிக்காவுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடமுடியாது என்றும், வழக்கம்போல ஓமன் மேற்கொள்ளும் மத்தியஸ்தம் வழியாக மறைமுகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என்றும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in