
சர்வதே பரிவர்த்தனைகளுக்கு டாலருக்கு மாற்றாக வேறு கரன்சியை பிரிக்ஸ் நாடுகள் உபயோகித்தால், அந்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 100 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார் டொனால்ட் டிரம்ப்.
கடந்த அக்டோபர் மாதம் ரஷ்யாவின் கஸன் நகரில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, எகிப்து, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கச்சா எண்ணெய் வணிகம் உள்ளிட்ட சர்வதேச வணிகம் சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு அமெரிக்க டாலர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்க டாலருக்கு மாற்றாக உள்ளூர் கரன்சிகளில் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக இந்த 16-வது பிரிக்ஸ் உச்ச மாநாட்டில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனையின்போது சர்வதேச பரிவர்த்தனையில் டாலருக்கு மாற்றாக வேறு கரன்சியை உபயோகிக்கும் திட்டத்திற்கான உடனடி ஆதரவை இந்தியா வழங்கவில்லை. அதேநேரம் அமெரிக்க டாலரை ஏற்றுக்கொள்ளாத (ரஷ்யா போன்ற) நாடுகளுடன் வணிகம் மேற்கொள்ளும்போது எந்த கரன்சியை உபயோகிப்பது என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என கருத்து தெரிவித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.
இந்நிலையில், தேர்தலில் வெற்றிபெற்று வரும் ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார் டொனால்ட் டிரம்ப். டாலருக்கு மாற்றாக வேறு கரன்சியை உபயோகிக்கும் வகையிலான ஆலோசனையை மேற்கொண்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தன் எக்ஸ் கணக்கில் டிரம்ப் பதவிட்டுள்ளவை பின்வருமாறு.
`அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு கரன்சியை உபயோகிக்கமாட்டோம் என்ற உத்தரவாதத்தை பிரிக்ஸ் நாடுகள் அளிக்கவேண்டும். ஒரு வேளை அப்படி நடந்தால் அவர்களின் பொருட்களுக்கு 100 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் அல்லது அமெரிக்காவுடனான வணிகத்தை அவர்கள் ஒட்டுமொத்தமாக மறந்துவிடவேண்டும்’ என்றார்.