அமெரிக்காவில் உற்பத்தி செய்யவில்லை என்றால் 25% வரி: ஆப்பிளுக்கு டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க அரசு மேற்கொண்ட பரஸ்பர வரி நடவடிக்கையால், சீனாவில் இருந்து உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் நிர்வாகம் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் உற்பத்தி செய்யவில்லை என்றால் 25% வரி: ஆப்பிளுக்கு டிரம்ப் எச்சரிக்கை
ANI
1 min read

அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ அல்ல - அமெரிக்காவில் தயாரிக்கப்பட வேண்டும், இல்லையென்றால் குறைந்தபட்சம் 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிற்கு நேற்று (மே 24) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தன் ட்ரூத் சோஷியல் சமூக வலைதளக் கணக்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட பதிவில் கூறியதாவது, `அமெரிக்காவில் விற்கப்படும் அவர்களின் ஐபோன்கள் இந்தியாவிலோ அல்லது வேறு எங்கும் அல்ல, அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டு, கட்டமைக்கப்படவேண்டும் என எதிர்பார்க்கிறேன் என்று ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கிடம் நீண்ட காலத்திற்கு முன்பே நான் தெரிவித்திருந்தேன்’ என்றார்.

அவ்வாறு நடைபெறவில்லை என்றால், ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவிற்கு குறைந்தபட்சம் 25% வரியை செலுத்தவேண்டும் என்று தனது பதிவில் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் சந்தைக்கு முந்தைய வர்த்தகத்தில், ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 3 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவை சந்தித்தன.

சீனா மீது டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்ட பரஸ்பர வரி நடவடிக்கையால், உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற டிம் குக்கி தலைமையிலான ஆப்பிள் நிர்வாகம் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதேநேரம், ஆப்பிளின் இந்த முடிவை அதிபர் டிரம்ப் ஆரம்பம் முதலே விமர்சித்து வருகிறார்.

கடந்த வாரம் மத்திய கிழக்கில் பயணம் மேற்கொண்டிருந்தபோதும்கூட இந்த விவகாரம் தொடர்பாக டிரம்ப் கருத்து தெரிவித்திருந்தார். அங்கே நடைபெற்ற ஒரு நிகழ்வில் வைத்து `நேற்று டிம் குக்குடன் ஒரு சிறிய பிரச்னை ஏற்பட்டது. அவர் இந்தியா முழுவதும் உற்பத்தி மேற்கொள்கிறார். நீங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்வதை நான் விரும்பவில்லை’ என்றார்.

மார்ச் மாதம் வரையிலான கடந்த நிதியாண்டின் முடிவில், இந்தியாவில் 22 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் (அசெம்பிள்) கட்டமைப்பு செய்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in