
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் நடந்த விழாவில், அந்நாட்டின் 47-வது அதிபராகப் பதவியேற்றார் டொனால்ட் டிரம்ப்.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரீஸைத் தோற்கடித்தார் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப். இதனை அடுத்து அந்நாட்டில் வழக்கமாகப் பின்பற்றப்படும் மரபுப்படி இன்று (ஜன.20) 47-வது அமெரிக்க அதிபராக அவர் பதவியேற்றுக்கொண்டார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கேபிடல் கட்டடத்தின் ரோட்டுண்டா அரங்கில் நடந்த விழாவில், டிரம்பிற்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ். டிரம்ப் பதவியேற்பதற்கு முன்பு, அமெரிக்காவின் 50-வது துணை அதிபராகப் பதவியேற்றார் ஜே.டி. வான்ஸ்.
வழக்கமாக கேபிடல் கட்டட வளாகத்தின் திறந்தவெளியில் அமெரிக்க அதிபர்களின் பதவியேற்பு விழா நடைபெறும். ஆனால், இன்று கடும் குளிர் நிலவும் என்ற வானிலை முன்னறிவிப்பு காரணமாக, உள் அரங்கில் இந்தப் பதவியேற்பு விழா நடைபெற்றது.
முந்தைய அமெரிக்க அதிபர்களான ஜோ பைடன், பராக் ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், அமெரிக்க தொழிலதிபர்கள் எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், மார்க் ஜுகர்பெர்க், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றார்கள்.