இந்தியா மீது மேலும் 25% வரி விதிப்பு: டிரம்ப் | Donald Trump

"கூடுதல் வரியை விதிக்க அமெரிக்கா முடிவு செய்திருப்பது முற்றிலும் துரதிருஷ்டவசமானது."
கோப்புப்படம்
கோப்புப்படம்REUTERS
2 min read

இந்தியா மீது ஏற்கெனவே 25% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 25% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாததால், வரியை உயர்த்தியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ரஷ்யாவிலிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதாலும், இந்தியா - அமெரிக்கா இடையே நீண்டகாலமாக நிலவும் வர்த்தகத்திற்கான கட்டுப்பாடுகள் காரணமாகவும் இந்தியா மீது வரி விதிப்பு அதிகரிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது. 15% முதல் 20% வரை வரி விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான வரி 25% என அதிபர் டிரம்ப் கடந்த ஜூலை 31 அன்று அறிவித்தார். இது ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. பிறகு, ஆகஸ்ட் 7 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தாவிட்டால், இந்த வரி விதிப்பானது மேலும் உயர்த்தப்படும் என டிரம்ப் நேர்காணல் ஒன்றில் ஆகஸ்ட் 5 அன்று அறிவித்திருந்தார். அடுத்த 24 மணி நேரத்தில் வரி உயர்த்தப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில் தான், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான வரி மேலும் 25% உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான வரி அமெரிக்காவில் 50% ஆக உயர்ந்துள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள வரி விதிப்பானது, ஆகஸ்ட் 21 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் விலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருள்கள் தவிர, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து இந்தியப் பொருள்களுக்கும் இந்த வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்தியாவின் பதில் என்ன?

அமெரிக்காவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மத்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

"ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை வைத்து சமீப நாள்களாக இந்தியாவைக் குறி வைக்கிறது அமெரிக்கா. இந்த விவகாரத்தில் நம் நிலைப்பாட்டை ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டோம். சந்தை சூழல்களைச் சார்ந்தே நம் இறக்குமதிகள் அமைந்துள்ளன.

மற்ற பல நாடுகள் தங்களுடைய சொந்த தேச நலனுக்காக மேற்கொள்ளும் நடவடிக்கையையே இந்தியாவும் மேற்கொள்கிறது. இதற்காக கூடுதல் வரியை விதிக்க அமெரிக்கா முடிவு செய்திருப்பது முற்றிலும் துரதிருஷ்டவசமானது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை நியாயமற்றது. சொந்த தேச நலனைக் காப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும்" என்று வெளியுறவு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Donald Trump | Russian oil purchases | Russian oil | US | Trump Tariff | US Tariff | India | MEA | Ministry of External Affairs | Indian Goods | Imports | Indian imports | US tariff on India | Indian Products

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in