
கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் மிக வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் பைடனைக் கடுமையாக விமர்சித்துள்ளார் புதிய அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்.
கடந்த ஜனவரி 7-ல் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் தெற்குப்பகுதியில் உள்ள காடுகளில் தீப்பிடித்தது. அப்பகுதியில் மணிக்கு 160 கி.மீ.க்கும் வேகமாக வீசிய காற்றால் இந்தக் காட்டுத்தீ மளமளவெனப் பரவி, 24 மணிநேரத்திற்குள் சுமார் 3000 ஏக்கர் காட்டுப்பகுதி தீயில் எரிந்து நாசமானது.
மேலும் இந்தக் காட்டுத் தீயால் வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இதனால் அப்பகுதியில் வசித்து வந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். அத்துடன் இந்தக் காட்டுத் தீயால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
கலிஃபோர்னியாவில் தற்போது நிலவும் வறட்சியான தட்பவெப்ப சூழல் காட்டுத்தீ பரவக் காரணமாக அமைந்துள்ளது. மேலும், அங்கே கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவருவதில் தீயணைப்பு வீரர்கள் கடும் சவாலைச் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக ட்ரூத் சோஷியல் சமூக வலைதளக் கணக்கில் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளவை பின்வருமாறு,
`தீயை அணைப்பதற்குத் தண்ணீர் இல்லை. பணமும் இல்லை. இத்தகைய நிலையில் ஆட்சியை என்னிடம் விட்டுச்செல்கிறார் ஜோ பைடன். நன்றி ஜோ!’ என்றார்.