
கத்தார் மீது ஏதேனும் நாடு தாக்குதல் நடத்தினால், கத்தாருக்கு ராணுவ நடவடிக்கை உள்ளிட்ட பாதுகாப்பு உத்தரவாதத்தை அளிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனாலட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
கத்தாரிலுள்ள ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்து அண்மையில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் கத்தார் அதிகாரிகள் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு கத்தார் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கண்டனங்களைப் பதிவு செய்தார்கள்.
இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து, ஹமாஸின் மூத்த தலைவர்கள் யாரும் கொல்லப்படவில்லை என ஹமாஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், தி நியூ யார்க் டைம்ஸ் செய்தியின்படி அக்டோபர் 2023 தாக்குதலின் திட்டத்துக்கு உதவிய முக்கியத் தலைவர் கலீல் அல்-ஹய்யாவின் மகன் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டது. கத்தார் உள்நாட்டு பாதுகாப்புப் படைடையச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உள்பட மேலும் 4 பேர் உயிரிழந்தார்கள். கத்தார் பிரதமர் ஷேக் முஹமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி, இதை அரச பயங்கரவாதம் எனக் கண்டித்தார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கத்தார் பிரதமரைத் தொடர்புகொண்டு, கத்தார் அதிகாரி உயிரிழந்ததற்கு வருத்தத்தைத் தெரிவித்தார். கத்தாரின் இறையாண்மையை மீறும் எண்ணம் எதுவும் இல்லை என நேதன்யாகு கூறியதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டது.
காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மத்தியஸ்தப் பணியில் கத்தார் முக்கியப் பங்கை ஆற்றி வருகிறது. இந்நிலையில் தான் கத்தார் மற்றும் அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
கத்தாரின் உள்கட்டமைப்பு, இறையாண்மை மீதான ராணுவ நடவடிக்கையை தனது அமைதி மற்றும் பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாகவே அமெரிக்கா கருதும் என்று செப்டம்பர் 29 தேதியிட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இதுபோன்ற தாக்குதல் நிகழும் பட்சத்தில் தூதரக, பொருளாதார மற்றும் தேவைப்பட்டால் ராணுவம் உள்பட அனைத்து சட்டரீதியான மற்றும் உரிய நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளும். அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்காக கத்தார் மற்றும் அமெரிக்காவின் நலன்களைப் பாதுகாக்கும்" என்று டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கூட்டாளியாக அறியப்படும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் தான் கத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
Qatar | US | America | Donald Trump | Israel |