
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை சுட்டது 20 வயது இளைஞர் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், பென்னிசில்வேனியாவில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் தேர்தல் பரப்புரை நிகழ்த்தினார். அப்போது திடீரென டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் டிரம்பின் காதுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பாதுகாவலர்களின் உதவியுடன் அப்பகுதியிலிருந்து வெளியேறினார் டிரம்ப். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர், துப்பாக்கிச் சூட்டில் பலியானார். இதன்பிறகு, துப்பாக்கியால் சுட்ட நபரைச் சுட்டுக் கொன்றது சிறப்புப் பாதுகாப்புப் படை.
இதுதொடர்பாக, அமெரிக்க ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில், டிரம்பை சுட்டவர் பென்சில்வேனியாவின் பெத்தெல் பார்க்கைச் சேர்ந்த 20 வயது தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். டிரம்ப் மேற்கொண்டு வந்த பரப்புரை மேடையிலிருந்து 119 மீட்டர் தொலைவிலிருந்து அந்த இளைஞர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் டிரம்புக்குக் காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. பார்வையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளார்கள். துப்பாக்கிக் குண்டு வலது பக்கத்திலுள்ள காதின் மேல் பகுதியை துளைத்துச் சென்றதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.