ஈரான் மீதான ராணுவ தாக்குதலை நிறுத்துவது குறித்து பரிசீலிக்கலாம்: அதிபர் டிரம்ப் கருத்து | Donald Trump |

ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கா பயன்படுத்துவதில்லை என்றாலும் மற்ற நாடுகள் அதைப் பாதுகாப்போடு பயன்படுத்த கண்காணிக்க வேண்டும்...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (கோப்புப்படம்)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (கோப்புப்படம்)
2 min read

இலக்குகளை அடைவதற்கு அருகில் சென்று கொண்டிருப்பதால் ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதைப் பற்றி பரிசீலிக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28 அன்று ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. இதில் ஈரானின் முக்கிய உயர் தலைவர் அலி காமெனி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதல் நடவடிக்கை தொடரும் நிலையில், ஈரானின் பல தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பதிலுக்கு ஈரானும் இஸ்ரேலையும் தனக்கு அருகில் உள்ள வளைகுடா நாடுகளையும் தாக்கி வருகிறது. மேலும் எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கியமான ஹார்முஸ் நீரிணையை முடக்கி, உலகம் முழுவதும் எரிசக்தி தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

விலை ஏற்றத்தைக் குறைக்கும் அறிவிப்பு

தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 டாலரைக் கடந்துள்ளது. இதனைக் குறைக்கும் வகையில் ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதி தடைகளை அமெரிக்கா தற்காலிகமாக நீக்கியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

ஈரான் உலகளாவிய பயங்கரவாதத்தின் தலைமைப் பாம்பாக உள்ளது. அதிபர் டிரம்பின் ஆபரேஷன் எபிக் ஃபியூரி மூலம், நாம் இந்த முக்கியமான போராட்டத்தில் எதிர்பார்த்ததை விட வேகமாக வெற்றி பெற்று வருகிறோம். ஈரானின் உலகளாவிய எரிசக்தி உட்கட்டமைப்புக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பதிலடியாக, டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் ராணுவ வலிமையைத் தொடர்ந்து பயன்படுத்தி, உலகிற்கு எரிசக்தி ஓட்டத்தை அதிகரிப்பது, உலகளாவிய விநியோகத்தை வலுப்படுத்துவது மற்றும் சந்தை நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கு முயலும்.

இன்று, கடலில் தேங்கியிருக்கும் ஈரான் எண்ணெய்யின் விற்பனைக்கு அனுமதி அளித்து அமெரிக்க பொருளாதாரத் துறை ஒரு குறுகிய, குறுகிய கால அனுமதியை வழங்குகிறது. தற்போது, சீனா இந்த சர்வதேச தடைசெய்யப்பட்ட இரானிய எண்ணெயை மலிவாகச் சேகரித்து வைத்திருக்கிறது. தற்போது கடலில் உள்ள இருப்பைப் பயன்படுத்திக் கொள்ள உலகிற்கு தற்காலிக அனுமதி வழங்குவதன் மூலம், அமெரிக்கா சுமார் 140 மில்லியன் பீப்பாய் எண்ணெயை உலக சந்தைகளுக்கு விரைவாக கொண்டு வரும். இது உலகளாவிய எரிசக்தி அளவை அதிகரித்து, ஈரானால் ஏற்படும் தற்காலிக விநியோக அழுத்தங்களை குறைக்க உதவும்.

முக்கியமாக, நாம் இரானிய பீப்பாய்களை தெஹ்ரானுக்கு எதிராக பயன்படுத்தி, விலையைக் குறைத்து வைத்திருக்கிறோம். ஆபரேஷன் எபிக் ஃபியூரியைதொடர்ந்து செயல்படுத்துகிறோம். இந்த தற்காலிக, குறுகிய கால அனுமதி கடலில் ஏற்கனவே இருக்கும் எண்ணெய்க்கு மட்டுமே. புதிய கொள்முதல் அல்லது உற்பத்திக்கு அனுமதி இல்லை. மேலும், இதிலிருந்து வரும் வருவாயை ஈரான் அணுகுவது கடினமாக இருக்கும். அமெரிக்கா ஈரானுக்கு எதிரான அதிகபட்ச அழுத்தத்தை தொடர்ந்து கொடுக்கும். சர்வதேச நிதி அமைப்பை அணுகுவதற்கான ஈரானின் திறனைத் தடுத்து வருகிறோம். இப்போது ஏற்படும் எந்த தற்காலிக இடையூறும் இறுதியில் அமெரிக்கர்களுக்கு நீண்டகால பொருளாதார லாபமாக மாறும். பாதுகாப்பு இல்லாமல் செழிப்பு இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.

போர் நிறுத்தம் குறித்து பரிசீலனை

இதையடுத்து இலக்குகளை நிறைவேற்றுவதற்கு மிக அருகில் வந்துள்ளதால் ஈரான் மீதான தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர் கூறியதாவது:-

“ஈரானின் பயங்கரவாத ஆட்சியுடன் தொடர்புடைய மத்திய கிழக்கில் நமது சிறந்த ராணுவ முயற்சிகளை முடிவுக்கு கொண்டு வருவதை நாம் பரிசீலிக்கும் போது, (1) ஈரானிய ஏவுகணை திறனை முழுமையாக சிதைப்பது, (2) ஈரானின் பாதுகாப்பு தொழில்துறை அடித்தளத்தை அழிப்பது. (3) அவர்களின் கடற்படை மற்றும் விமானப்படையை அழிப்பது, (4) ஈரான் அணு திறனுக்கு எப்போதும் நெருங்கக்கூடாது என்பதை உறுதி செய்வது, (5) நமது மத்திய கிழக்கு கூட்டாளிகளை உயர்ந்த அளவில் பாதுகாப்பது ஆகிய நமது இலக்குகளை நிறைவேற்றுவதற்கு மிக அருகில் சென்று கொண்டிருக்கிறோம் என்பது தெரிகிறது. இனி, ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கா பயன்படுத்துவதில்லை என்றாலும் மற்ற நாடுகள் அதைப் பாதுகாப்போடு பயன்படுத்த கண்காணிக்க வேண்டும். அதற்கு அமெரிக்க முழு உதவிகளைச் செய்யும். ஈரானின் அச்சுறுத்தல் முற்றிலும் நிறுத்தப்பட்ட பிறகு அதுவும் தேவைப்படாது” என்று பதிவிட்டுள்ளார்.

Summary

US President Trump has said ”We are getting very close to meeting our objectives as we consider winding down our great Military efforts in the Middle East with respect to the Terrorist Regime of Iran”

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in