
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த, அமெரிக்க மாகாணமான அலாஸ்காவில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தகவல் தெரிவித்தார்.
ட்ரூத் சோஷியல் சமூக ஊடக கணக்கில் நேற்று (ஆக. 8) வெளியிட்ட ஒரு பதிவின் மூலம் இந்த தகவலை டிரம்ப் தெரியப்படுத்தினார்.
`அமெரிக்காவின் அதிபரான எனக்கும், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கும் இடையிலான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு அடுத்த வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 15, 2025 அன்று மாபெரும் மாகாணமான அலாஸ்காவில் நடைபெறும். மேலும் விவரங்கள் வழங்கப்படும்’ என்று டிரம்ப் அந்த பதிவில் கூறியுள்ளார்.
டிரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை ரஷ்ய அரசு உறுதிபடுத்தியது.
உக்ரைன் பிரச்னைக்கு நீண்டகால அமைதியை அளிக்கும் தீர்வை அடைவதற்கான வழிகள் குறித்து விவாதிப்பதில் தலைவர்கள் கவனம் செலுத்துவார்கள் என்றும், அது ஒரு `சவாலான காரியம்’ என்றும் ரஷ்ய அதிகாரியான யூரி உஷாகோவ் ஒப்புக்கொண்டார் என்று ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், ஸ்போரிஸ்ஸியா மற்றும் கெர்சன் ஆகிய நான்கு உக்ரைனியப் பகுதிகளையும், 2014-ல் இணைக்கப்பட்ட கிரிமியாவையும் ரஷ்ய அதிபர் புதின் உரிமை கோருகிறார். அதேநேரம் இந்த பகுதிகள் அனைத்தும் முழுமையாக ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் தற்போது இல்லை.
முன்னதாக, உக்ரைனில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் ரஷ்யாவின் பிடியை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்ய அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகள் பணியாற்றி வருவதாக ப்ளூம்பெர்க் நியூஸ் செய்தி வெளியிட்டது. அதேநேரம் இந்த செய்தி ஆதாரமில்லாதது என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் நிராகரித்துள்ளார்.