தாக்குதலை நிறுத்துங்கள்: இஸ்ரேலுக்கு டிரம்ப் வலியுறுத்தல் | Israel - Gaza War | Donald Trump |

ஹமாஸ் அமைப்பினர் அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட நிலையில் பிணைக் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை....
தாக்குதலை நிறுத்துங்கள்: இஸ்ரேலுக்கு டிரம்ப் வலியுறுத்தல் | Israel - Gaza War | Donald Trump |
ANI
2 min read

அமெரிக்காவின் போர் நிறுத்தத் திட்டத்திற்கு ஹமாஸ் அமைப்பினர் ஒப்புதல் அளிப்பதாகக் கூறிய நிலையில் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஹமாஸ் படையினருக்கும் கடந்த 2 ஆண்டுகளாக போர் நிலவி வருகிறது. இதனால் பாலஸ்தீன மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக காஸா பகுதியில் நகர்கள் முழுவதுமாக சேதமாகியுள்ளன. இந்தப் போரில் இதுவரை 63,800 மக்கள் உயிரிழந்துள்ளார்கள்.

இதையடுத்து, சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சந்தித்தார். அப்போது இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்த அதுபர் டிரம்ப் உருவாக்கிய 20 குறிப்புகள் கொண்ட விரிவான திட்டத்தை நெதன்யாகு ஒப்புக் கொண்டார். ஹமாஸ் அமைப்பினருக்கும் இந்தப் போர் நிறுத்தத் திட்டம் அனுப்பப்பட்டு, ஒப்புதல் அளிக்க காலக்கெடுவும் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஹமாஸ் அமைப்பினர் கடிதம் ஒன்றை அனுப்பினர். அதில்,

காஸா பகுதியில் மக்கள் மீது நடத்தப்படும் ஆக்கிரமிப்பு மற்றும் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டு வரும் ஆர்வத்தில், தேசிய பொறுப்புணர்வை நிலை நாட்டவும், மக்களின் கொள்கைகள், உரிமைகள் மற்றும் உயர் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு, அதன் தலைமைகளுடனுடனும் பாலஸ்தீன படைகளுடனும் ஆதரவாளர்கள் மற்றும் மத்தியஸ்தர்களுடனும் ஆழமாக ஆலோசனை மேற்கொண்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் திட்டங்களைப் பொறுப்புடன் அணுகுவதற்கு முடிவெடுத்துள்ளது.

முழுமையான ஆய்வுக்குப் பிறகு, இயக்கம் தனது முடிவை எடுத்து, மத்தியஸ்தர்களுக்கு பின்வரும் பதிலை தெரிவித்துள்ளது:

காஸா பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், கைதிகளை விடுவிப்பதற்கும், உடனடியாக உதவிகளை அனுமதிப்பதற்கும், காஸா பகுதியின் ஆக்கிரமிப்பை மறுப்பதற்கும், நமது பாலஸ்தீனிய மக்களின் இடம்பெயர்வை மறுப்பதற்கும் அழைப்பு விடுத்துள்ள அரபு, இஸ்லாமிய மற்றும் சர்வதேச முயற்சிகளையும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முயற்சிகளையும் ஹமாஸ் பாராட்டுகிறது.

அதன் அடிப்படையில் போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையிலும், காஸா பகுதிகளில் இருந்து பின்வாங்கும் நடவடிக்கைக்காகவும், பணைய கைதிகளை விடுவிக்கவும், இறந்த கைதிகளின் உடல்களை ஒப்படைக்கவும் ஹமாஸ் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், காஸா பகுதியின் நிர்வாகத்தையும் அரபு மற்றும் இஸ்லாமிய ஆதரவுடன், சுயாதீனமான பாலஸ்தீனிய அமைப்புக்கு ஒப்படைப்பதற்கு இயக்கம் மீண்டும் ஒப்புதல் அளிக்கிறது.

அதிபர் டிரம்பின் முன்மொழிவில் உள்ள காஸா பகுதியின் எதிர்காலம் மற்றும் பாலஸ்தீனிய மக்களின் உரிமைகள் தொடர்பான பிற பிரச்னைகளை, ஒரு கூட்டு தேசிய நிலைப்பாட்டுடன் கூடிய சர்வதேச சட்டங்கள் மற்றும் தீர்மானங்களுக்கு ஏற்ப, விரிவான பாலஸ்தீனிய தேசிய கட்டமைப்பிற்குள் விவாதிக்கப்பட வேண்டியவை அகும். அதற்கு ஹமாஸ் முழு பொறுப்புடன் பங்களிக்கும்.”

என்று குறிப்பிட்டது. இதை வரவேற்ற அதிபர் டிரம்ப்,

“ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், அவர்கள் நீடித்த அமைதிக்கு தயாராக இருப்பதாக நம்புகிறேன். இஸ்ரேல் உடனடியாக காஸாவின் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும். இதனால் பிணைக் கைதிகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் விடுவிக்க முடியும். அதை ஆபத்து இல்லாத முறையில் செய்வது எப்படி என்பது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். இது காஸா மட்டுமல்ல, இது மத்திய கிழக்கில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அமைதி பற்றியது ஆகும்.”

என்று தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கைகளை வரவேற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவரது சமூக ஊடகப் பதிவில்,

“காஸாவில் அமைதி முயற்சிகள் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலைமையை வரவேற்கிறோம். பிணைக் கைதிகள் விடுதலைக்கான அறிகுறிகள் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கின்றன. நீடித்த மற்றும் நியாயமான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கும்.”

என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in