
பிற நாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு அமெரிக்காவில் 100% வரி விதிக்கும் நடைமுறையைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அதிபர் டிரம்பின் ட்ரூத் சோஷியல் சமூக வலைதளக் கணக்கில், இந்திய நேரப்படி இன்று (மே 5) அதிகாலை வெளியிடப்பட்ட பதிவில் கூறியதாவது,
`அமெரிக்க திரைப்படத்துறை மிக வேகமாக மரணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. நமது தயாரிப்பாளர்களையும், ஸ்டுடியோக்களையும் அமெரிக்காவில் இருந்து விலக்கும் வகையிலான அனைத்துவித சலுகைகளையும் பிற நாடுகள் வழங்குகின்றன.
ஹாலிவுட் மற்றும் அமெரிக்காவில் உள்ள பல பகுதிகள் அழிவுக்கு உள்ளாகி வருகின்றன. பிற நாடுகளின் கூட்டு நடவடிக்கையால், தேசப் பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாக இந்த விவகாரம் உருவெடுத்துள்ளது. அனைத்துக்கும் மேலாக இது திட்டமிட்ட பிரச்சாரமாகும்.
எனவே நமது நாட்டிற்குள் வரும் வெளிநாட்டுத் திரைப்படங்கள் அனைத்திற்கும், 100% வரி விதிக்கும் நடைமுறையை உடனடியாகத் தொடங்க வர்த்தகத் துறைக்கும், அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதிக்கும் நான் அங்கீகாரம் அளிக்கிறேன்.
எங்களுக்கு அமெரிக்காவில் தயாரான திரைப்படங்கள் மீண்டும் வேண்டும்!’ என்றார்.
அதேநேரம், அமெரிக்க தயாரிப்பு நிறுவனங்களால் பிற நாடுகளில் தயாரிக்கப்படும் அமெரிக்கப் படங்களுக்கும் டிரம்பின் இந்த அறிவிப்பு பொருந்துமா என்பது குறித்த தெளிவான தகவல் இதுவரை வெளியாகவில்லை.