ஜி7 மாநாட்டிலிருந்து கிளம்பிய டிரம்ப்: ஈரானில் இருந்து அனைவரும் வெளியேற அறிவுரை!

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்கான வாய்ப்பு குறித்து டிரம்ப் பரிசீலித்து வருவதாக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் தகவல் தெரிவித்தார்.
டொனால்ட் டிரம்ப் - கோப்புப்படம்
டொனால்ட் டிரம்ப் - கோப்புப்படம்Hamad I Mohammed
1 min read

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் இன்று (ஜூன் 17) ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டிலிருந்து அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு நாள் முன்னதாகவே புறப்பட்டு, அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யை சென்றடைந்தார்.

இது தொடர்பான விரிவான தகவல்களை வெளியிடாமல், `மத்திய கிழக்கில் நடந்துகொண்டிருப்பது தொடர்பாகவே அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகத் தலைவர்கள் மாநாட்டில் இருந்து வெளியேறுவதாக’ வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கப் பயன்படுத்தப்படும், வெள்ளை மாளிகை நெருக்கடி மேலாண்மை மைய அறையில் தயாராக இருக்குமாறு தேசிய பாதுகாப்பு குழுவிற்கு டிரம்ப் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், உடனடியாக அந்நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் இருந்து அனைவரையும் வெளியேறும்படி டிரம்ப் நேற்று (ஜூன் 17) வலியுறுத்தினார். மேலும், அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்கவேண்டும் என்பதையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டிற்கு இடையே, தன் ட்ரூத் சோஷியல் கணக்கில் டிரம்ப் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,

`நான் கையெழுத்திடச் சொன்ன ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்கவேண்டும். இது ஒரு அவமானகரமான காரியம். எளிமையாகச் சொன்னால், ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது. இதைத்தான் நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்! அனைவரும் உடனடியாக தெஹ்ரானை காலி செய்யவேண்டும்!’ என்றார்.

இதற்கிடையே, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்கான வாய்ப்பு குறித்து டிரம்ப் பரிசீலித்து வருவதாக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன், ஜி7 உச்சி மாநாட்டின்போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதேநேரம், இஸ்ரேல்-ஈரான் மோதலைத் தணிக்க அழைப்புவிடுக்கும் ஜி7 தலைவர்கள் குழுவின் கூட்டு அறிக்கையில் அதிபர் டிரம்ப் கையெழுத்திடமாட்டார் என அமெரிக்க அதிகாரி ஒருவர் நேற்று (ஜூன் 16) தகவல் தெரிவித்துள்ளதாக, இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in