டிரம்ப் - புதின் 2 மணி நேரம் பேச்சு: முடிவுக்கு வருகிறதா உக்ரைன் போர்?

போரை முடிவுக்குக் கொண்டு வர உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவு நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்த புதின்...
கோப்புப்படம்
கோப்புப்படம்REUTERS
1 min read

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கானப் புதிய முயற்சியாக ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினுடன் இரண்டு மணி நேரம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022-ல் படையெடுக்கத் தொடங்கியது. நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா போரைத் தொடுத்தது. இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளன. அமெரிக்கா ராணுவ உதவிகளை வழங்கி வந்தது.

ஏறத்தாழ மூன்று ஆண்டுகளாகப் போர் மூண்டு வரும் நிலையில், போரை நிறுத்துவதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, உக்ரைன் போர் நிறுத்த முயற்சியில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.

உக்ரைனுக்கு வழங்கி வந்த ராணுவ உதவிகளை டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிறுத்தி வைத்தது. அண்மையில் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்ட உக்ரைன் அதிபர் வொலொதிமீர் ஸெலென்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியிடம் டொனால்ட் டிரம்ப் கடுமையாக நடந்துகொண்டது உலகளவில் கவனம் பெற்றது.

டிரம்ப் - ஸெலென்ஸ்கி இடையிலான இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போரை 30 நாள்களுக்கு நிறுத்தி வைக்க உக்ரைன் ஒப்புக்கொண்டது. ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டது. சௌதி அரேபியாவின் ஜெட்டாவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டது.

மேலும், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம், பரஸ்பரம் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று இரு தரப்பும் கூட்டறிக்கையை வெளியிட்டன. அமைதியை நிலைநாட்டுவதற்கான செயலில் ஐரோப்பியக் கூட்டாளிகளின் தலையீடு இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் உள்ளிட்ட அம்சங்கள் எதுவும் அதில் இடம்பெறவில்லை.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ரஷ்ய அதிபர் புதின், "பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் கூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது. அதிபர் டிரம்புடன் பேசி ஆலோசனை நடத்த வேண்டும்" என்றார்.

இந்தச் சூழலில் தான் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அமெரிக்க உள்நாட்டு நேரப்படி காலை 10 மணிக்கு புதினை அழைத்துள்ளார் டிரம்ப். இரண்டு மணி நேரம் நீடித்த இந்த உரையாடல் நல்ல முறையில் சென்றதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, போர் நிறுத்தத்துக்கான நடவடிக்கையாக உக்ரைனின் குறிப்பிட்ட உள்கட்டமைப்பு மீது 30 நாள்களுக்குத் தாக்குதல் நடத்தப்படாது என புதின் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், போரை முடிவுக்குக் கொண்டு வர உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவு நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்த புதின், போர் நிறுத்ததுத்தாக அமெரிக்காவுடன் இணைந்து செயல்படத் தயார் என்பதையும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in