ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு அமெரிக்க அரசு தடை: நடந்தது என்ன?

வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை மூலம், அதிகப்படியான கல்விக் கட்டணத்திலிருந்து பல பில்லியன் டாலர் மானியங்களைப் பல்கலைக்கழகங்கள் பெறுவது ஒரு சலுகை, உரிமை அல்ல.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு அமெரிக்க அரசு தடை: நடந்தது என்ன?
1 min read

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை உரிமத்தை ரத்து செய்ததன் மூலம், டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, மீண்டும் ஒருமுறை அந்நாட்டு கல்வியாளர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் `மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் திட்ட (SEVP)’ சான்றிதழ், உடனடியாக ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க உள்துறை அமைச்சர் கிறிஸ்டி நோயம் ஹார்வர்ட் நிர்வாகத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதள கணக்கில் வெளியிட்ட பதிவில் கிறிஸ்டி நோயம் கூறியதாவது, `வன்முறையை தூண்டியது, யூத எதிர்ப்பு செயல் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒருங்கிணைப்பு மேற்கொண்டதற்காக இந்த அரசு ஹார்வர்டை பொறுப்பேற்கச் செய்கிறது’ என்று அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், `வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை நடத்தி, அவர்களின் அதிகப்படியான கல்விக் கட்டணத்திலிருந்து பல பில்லியன் டாலர் மானியங்களைப் பல்கலைக்கழகங்கள் பெற்றுப் பயனடைவது ஒரு சலுகை, உரிமை அல்ல. சரியானதைச் செய்ய ஹார்வர்டு ஏராளமான வாய்ப்புகளைப் பெற்றது.

ஆனால் அது மறுத்துவிட்டது. சட்டத்தை கடைப்பிடிக்கத் தவறியதன் விளைவாக, தங்களின் மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் திட்ட சான்றிதழை அவர்கள் இழந்துள்ளனர்’ என்றார்.

மேலும், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இது ஒரு எச்சரிக்கை என்றும் அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச மாணவர்கள் சேர்க்கையை தடுக்கும் விதமான அமெரிக்க அரசின் முடிவை ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்த நடவடிக்கையை `சட்டவிரோதம்’ என்று கூறியதுடன், 140-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மாணவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் என்று அறிக்கை வாயிலாக அமெரிக்க அரசின் நடவடிக்கைக்கு ஹார்வர்ட் பதிலளித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 16 அன்று, ஹார்வர்டுக்கு முதல்முறையாக அமெரிக்க அரசு அனுப்பிய கடிதத்தில், பல்கலைக்கழக வளாகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பான (பங்கேற்கும் போராட்டங்கள் உள்பட) அனைத்து விவரங்களையும் அளிக்குமாறு கேட்டுக்கொண்டது.

ஆனால் அரசு கேட்டுக்கொண்டபடி முழுமையான விவரங்களை பல்கலைக்கழகம் பகிரவில்லை என்று கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே தற்போது அமெரிக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு அமெரிக்க அரசு வழங்கி வந்த 2.2 பில்லியன் டாலர் நிதியை நிறுத்திவைத்து கடந்த ஏப்.15-ல் அமெரிக்க அரசு உத்தரவிட்டது. 

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in