டிரம்ப், மஸ்க் மோதல்: ரஷ்யா கிண்டல்!

அதிகரித்து வரும் மோதல் மற்றும் வெளிப்படையான குற்றச்சாட்டுகள் காரணமாக சமரசத்திற்கு சாத்தியமில்லை.
டிரம்ப், மஸ்க் மோதல்: ரஷ்யா கிண்டல்!
1 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கும் இடையிலான வார்த்தை மோதல் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அது தொடர்பாக ரஷ்ய உயரதிகாரிகளிடம் இருந்து கிண்டலான எதிர்வினைகள் வெளியாகியுள்ளன.

டிரம்பும், மஸ்கும் தங்கள் சமூக வலைதளப் பதிவுகள் வழியாக பரஸ்பர அச்சுறுத்தல்கள் மற்றும் தூற்றல்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். இதில் உச்சகட்டமாக டிரம்பின் நெருங்கிய கூட்டாளியான ஸ்டீவ் பானன், எலான் மஸ்க்கை நாடு கடத்தவேண்டும் என்றும், அமெரிக்க அரசு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை கைப்பற்றவேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினின் நெருங்கிய கூட்டாளியும், ரஷ்ய இறையாண்மை செல்வ நிதியத்தின் தலைவருமான கிரில் டிமிட்ரீவ், எலான் மஸ்கின் எக்ஸ் பக்கத்தில், `நாம் அனைவரும் ஏன் ஒத்துப்போகக்கூடாது?’ என்று பதிவிட்டுள்ளார்.

அத்துடன் எக்ஸ் தளத்தின் சாட்பாட்டான `கிரோக்கிடம் (Grok)’, இவர்கள் இருவருக்கும் இடையே எவ்வாறு சமாதானம் செய்வது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு, `தனிப்பட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் வெளிப்படையான மன்னிப்பு கோரல்கள் தேவை, ஆனால் அதிகரித்து வரும் மோதல் மற்றும் வெளிப்படையான குற்றச்சாட்டுகள் காரணமாக சமரசத்திற்கு சாத்தியமில்லை’ என்று கிரோக் பதிலளித்துள்ளது.

மேலும், முன்னாள் அதிபரும், தற்போது ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவருமான டிமித்ரி மெட்வெதேவ் தன் எக்ஸ் கணக்கில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,

`நியாயமான கட்டணத்தின் அடிப்படையில் D மற்றும் E இடையே ஒரு சமாதான ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், அதற்கு ஸ்டார்லிங்க் (ஸ்பேஸ் எக்ஸ் துணை நிறுவனம்) பங்குகளை கட்டணமாக ஏற்றுக்கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். சண்டையிடாதீர்கள்!’ என்றார்.

ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், தற்போது ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனில் ரஷ்ய தளபதியாக பணியாற்றி வருபவருமான டிமித்ரி ரோகோசின் வெளியிட்ட பதிவில், `எலான் மஸ்க், வருத்தப்படாதீர்கள்! நீங்கள் ரஷ்யாவில் மதிக்கப்படுகிறீர்கள். தீர்க்க முடியாத பிரச்னைகளை அமெரிக்காவில் நீங்கள் எதிர்கொண்டால், எங்களுடன் வந்து எங்களில் ஒருவராகுங்கள்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in