ஆங்கிலத்தை அமெரிக்காவின் அதிகாரபூர்வ மொழியாக அறிவித்த டிரம்ப்!

ஆங்கிலத்தை அதிகாரபூர்வ மொழியாக நிறுவுவதன் மூலம், தேசிய மதிப்புகளை வலுப்படுத்தவும், ஒருங்கிணைந்த மற்றும் திறமையான சமூகத்தை உருவாக்கவும் முடியும்.
ஆங்கிலத்தை அமெரிக்காவின் அதிகாரபூர்வ மொழியாக அறிவித்த டிரம்ப்!
Nathan Howard
1 min read

அமெரிக்காவின் அதிகாரபூர்வ மொழியாக ஆங்கிலத்தை அறிவித்து உத்தரவிட்டுள்ளார் அதிபர் டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்க அதிபராக கடந்த ஜன.20-ல் பதவி ஏற்றுக்கொண்டார் டிரம்ப். பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே அமெரிக்க அதிபர் அலுவலகமாக வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் ஸ்பானிஷ் மொழிப் பதிப்பு நீக்கப்பட்டது. அதன்பிறகு அந்த வசதி மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என்று வெள்ளை மாளிகை அறிவித்தாலும், இன்று வரை அது செயல்பாட்டிற்கு வரவில்லை.

இதைத் தொடர்ந்து, விரைவில் அமெரிக்காவின் அதிகாரபூர்வ மொழியாக ஆங்கிலம் அறிவிக்கப்படக்கூடும் என்று கடந்த ஜனவரி மாதம் கூறப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவின் அதிகாரபூர்வ மொழியாக ஆங்கிலத்தை அறிவிக்கும் உத்தரவில் நேற்று (மார்ச் 1) கையெழுத்திட்டுள்ளார் டிரம்ப்.

அந்த உத்தரவில், `ஆங்கிலத்தை அதிகாரபூர்வ மொழியாக நிறுவுவதன் மூலம், தகவல்தொடர்புகளை ஒழுங்குபடுத்துவது மட்டுமல்லாமல், தேசிய மதிப்புகளை வலுப்படுத்தவும், ஒருங்கிணைந்த மற்றும் திறமையான சமூகத்தை உருவாக்கவும் முடியும்.

ஆங்கிலம் பேசுவது பொருளாதார ரீதியாக ஆதாயம் தருவது மட்டுமல்லாமல், புதியவர்களை சமூகங்களில் ஒன்றிணைய வைக்கவும், தேசியப் பாரம்பரியத்தில் பங்கேற்க வைக்கவும், சமுதாயத்திற்கு அவர்களை பங்களிக்க வைக்கவும் உதவுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தை அதிகாரபூர்வ மொழியாக 30-க்கும் மேற்பட்ட அமெரிக்க மாகாணங்கள் அறிவித்துள்ளன. 2019 புள்ளிவிவரப்படி, அமெரிக்காவில் ஏறத்தாழ 6.8 கோடி மக்கள் ஆங்கிலம் அல்லாத வேறு மொழியைப் பேசுகின்றார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in