
இஸ்ரேல் ஆதரவு குழுவினர் மீது அமெரிக்காவின் கொலராடோவில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்புக் காரணம் காட்டி, 12 நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் அமெரிக்காவில் நுழைவதைத் தடை செய்யும் பிரகடனத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரிட்டிரியா, ஹைத்தி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் உள்ளிட்ட 12 ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவில் நுழைவதை டிரம்பின் பிரகடனம் முழுமையாகக் கட்டுப்படுத்துகிறது.
காஸாவில் பிணையக் கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி அமெரிக்காவின் கொலராடோவில் கடந்த ஞாயிறன்று (ஜூன் 1) அமைதி பேரணி நடைபெற்றது. எகிப்தை சேர்ந்த முஹமது சப்ரொ சோலிமான், இந்த பேரணியில் கலந்துகொண்ட மக்கள் மீது தீ வைக்க முயற்சி செய்தார்.
இதில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினரால் சோலிமான் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த தாக்குதலைக் கண்டித்து, தன் ட்ரூத் சோஷியல் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப், 12 நாடுகளைச் சேர்ந்த குடியேற்றவாசிகள் அமெரிக்காவில் நுழையத் தடைவிதித்துள்ளார்.
வரும் ஜூன் 9 அன்று (அமெரிக்க நேரப்படி) அதிகாலை 12:01 மணிக்கு இந்த தடை அமலுக்கு வருகிறது. அத்துடன் கூடுதலாக புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் அமெரிக்காவில் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அபிகெய்ல் ஜாக்சன் தன் எக்ஸ் கணக்கில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது, `நமது நாட்டிற்குள் வந்து, நமக்குத் தீங்கு விளைவிக்க விரும்பும் ஆபத்தான வெளிநாட்டுவாசிகளிடம் இருந்து அமெரிக்கர்களைப் பாதுகாப்பதற்கான தனது வாக்குறுதியை அதிபர் டிரம்ப் நிறைவேற்றியுள்ளார்’ என்றார்.