
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு இந்தியாவிற்கு அமெரிக்க அரசு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைனில் அந்நாடு மேற்கொள்ளும் போருக்கு இந்தியா நிதியுதவி செய்வதாக அதிபர் டிரம்பிற்கு நெருக்கமான அமெரிக்க உயரதிகாரி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
`ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தப் போருக்கு இந்தியா நிதியுதவி செய்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று அவர் (டிரம்ப்) மிகத் தெளிவாகக் கூறினார்’ என்று வெள்ளை மாளிகை நிர்வாகத்தின் துணைத் தலைவரும், டிரம்பிடம் செல்வாக்கு பெற்றவர்களில் ஒருவருமான ஸ்டீபன் மில்லர், ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
மேலும், `ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதில் இந்தியா அடிப்படையில் சீனாவுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து மக்கள் அதிர்ச்சியடைவார்கள். அது ஒரு ஆச்சரியமான உண்மை’ என்று அந்த பேட்டியில் இந்தியா மீது கடுமையான விமர்சனத்தை ஸ்டீபன் மில்லர் முன்வைத்தார்.
சீனாவிற்கு அடுத்தபடியாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. மேலும் இந்தியாவிற்கான எரிபொருள் தேவையில் 30 சதவீதத்திற்கும் மேல் ரஷ்யாவிடம் இருந்து பெறப்படுகிறது. மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் ரஷ்யாவிற்கு இது பெரும் வருவாயை அளிக்கிறது.
அதேநேரம், கடந்த 2022-ல் உக்ரைனுடன் போர் தொடங்குவதற்கு முன்பு இந்தியாவிற்கான எண்ணெய் தேவையில் சுமார் 1% மட்டுமே ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
உக்ரைனுடன் ரஷ்யா அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்யாவிட்டால், அந்நாட்டு எண்ணெயை வாங்கும் நாடுகளில் இருந்து அமெரிக்காவில் மேற்கொள்ளப்படும் இறக்குமதிகளுக்கு 100% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவும், சீனாவும் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா உறுப்பினராக இருப்பதையும் டிரம்ப் விமர்சித்துள்ளார்.