
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஊழியர்கள் வாரத்துக்கு நான்கு நாள்கள் மட்டுமே வேலை பார்க்கும் வகையில் புதிய முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் பிறப்பு விகிதம் குறைந்ததன் காரணமாக, டோக்கியோ பெருநகர அரசால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இளம் குடும்பத்தினருக்கு ஆதரவாக நிற்கும் வகையில், இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் முதல் இது நடைமுறைக்கு வருகிறது.
ஜப்பானில் கடந்தாண்டு பிறப்பு விகிதம் 1.2 ஆக குறைந்தது. மக்கள்தொகை நிலைத்தன்மையுடன் நீடிக்க பிறப்புவிகிதம் 2.1 ஆக இருக்க வேண்டும். குழந்தைகள் பிறக்கும் விகிதத்தை அதிகரிக்க அந்த நாட்டு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும், பிறப்புவிகிதம் சரிவைக் கண்டு வருகிறது. ஜப்பானில் கடந்தாண்டு வெறும் 7,27,277 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன.
இதன் எதிரொலியாக டோக்கியோ பெருநகர அரசு புதிய கொள்கைத் திட்டத்தை அறிவித்துள்ளது. நாடு சவாலான நேரத்தை எதிர்கொண்டு வரும் இந்தச் சூழலில் டோக்கியோவில் மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம், பொருளாதாரம் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்க வேண்டிய நேரம் என டோக்கியோ கவனர்னர் தெரிவித்துள்ளார்.
இதன் பகுதியாக ஊழியர்கள் வாரத்துக்கு நான்கு நாள்கள் மட்டுமே வேலை பார்க்கும் வகையில் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மூன்று நாள்கள் விடுப்பு எடுப்பதற்கான வாய்ப்பு ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ளது. குழந்தை பிறப்பு அல்லது குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக வேலைவாய்ப்பில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் குடும்பத்தினரிடம் கூடுதல் நேரத்தை செலவிடுவதற்கான சூழல் உருவாகும் என டோக்கியோ பெருநகர அரசு நம்புகிறது.