டைட்டானிக் பயணிகளை மீட்ட கேப்டனின் கடிகாரம்: ரூ. 16 கோடிக்கு ஏலம்!

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சென்றுகொண்டிருந்தபோது பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளாகி, கடலில் மூழ்கியது டைட்டானிக்.
டைட்டானிக் பயணிகளை மீட்ட கேப்டனின் கடிகாரம்: ரூ. 16 கோடிக்கு ஏலம்!
https://www.instagram.com/henryaldridgeauctioneers/
1 min read

நூற்றுக்கணக்கான டைட்டானிக் பயணிகளைக் காப்பாற்றிய கேப்டன் ஆர்தர் ரோஸ்டிரனின் தங்க கடிகாரம் இன்று (நவ.11) ரூ. 16 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளை சுமந்து கொண்டு, கடந்த 1912 ஏப்ரல் 10-ல் இங்கிலாந்தில் இருந்து கிளம்பி, அமெரிக்காவின் நியூயார்க்கை நோக்கிச் சென்றுகொண்டிருந்து டைட்டானிக் சொகுசுக் கப்பல். 4 நாட்கள் கழித்து, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சென்றுகொண்டிருந்தபோது பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளாகி, கடலில் மூழ்கியது டைட்டானிக்.

வரலாற்றில் நடந்த மோசமான கடல் விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதனை அடுத்து, அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழத்தில் உள்ள டைட்டானிக்கில் இருந்து மீட்கப்பட்ட பொருட்களும், டைட்டானிக் கப்பலில் பயணித்தவர்களுக்குச் சொந்தமான பொருட்களும் அவ்வப்போது ஏலத்தில் விடப்படுகின்றன. இந்நிலையில் டைட்டானிக் பயணிகளை மீட்ட கேப்டன் ஆர்தர் ரோஸ்டிரனுக்குச் சொந்தமான தங்க கடிகாரம் இன்று இங்கிலாந்தில் ஏலத்தில் விடப்பட்டது.

ஏலத்தின் முடிவில் 1.56 மில்லியன் பிரிட்டன் பவுண்டுகளுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 16 கோடி) விலை போனது ரோஸ்டிரனின் தங்க கடிகாரம். இதற்கு முன்பு டைட்டானிக் பயணி ஜான் ஜேக்கப் ஆஸ்டரின் தங்க கடிகாரம் சுமார் 12.4 கோடிக்கு ஏலத்தில் போனதே சாதனையாக இருந்தது. இன்று அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

அட்லாண்டிக் பெருங்கடலில் விபத்துக்குள்ளான பிறகு, டைட்டானிக்கில் இருந்து சுமார் 705 பயணிகளைக் காப்பாற்றி, கார்பேத்தியா கப்பலில் பாதுகாப்பாக அழைத்துச் சென்ற கேப்டன் ஆர்தர் ரோஸ்டிரனின் வீரச்செயலைப் பாராட்டும் வகையில் இந்த தங்க கடிகாரம் நியூயார்க்கில் வைத்து அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in