
அமெரிக்க அரசு டிக் டாக் செயலிக்கு விதித்த தடை இன்று (ஜன.19) முதல் அமலுக்கு வரும் நிலையில், டிக் டாக் சேவையை அமெரிக்காவில் நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது அந்நிறுவனம்.
டிக் டாக் செயலியை உருவாக்கிய `பைட் டான்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் சீனாவைச் சேர்ந்தவர். இதனால், டிக் டாக் செயலியால் அமெரிக்காவின் தேசப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளதாக நீண்ட காலமாகக் கூறப்பட்டு வந்தது.
இதைத் தொடர்ந்து, டிக் டாக் செயலிக்கான உரிமையை வேறு நிறுவனத்திற்குப் பைட் டான்ஸ் நிறுவனம் கைமாற்றவில்லை என்றால், ஜன.19 முதல் அமெரிக்காவில் டிக் டாக்கைத் தடை செய்யும் வகையிலான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், டிக் டாக் செயலிக்கான உரிமையை பைட் டான்ஸ் நிறுவனம் கைமாற்றவில்லை என்பதை ஒட்டி அமெரிக்க அரசு விதித்த தடை இன்று அமலுக்கு வந்தது. இதனால், தங்களின் கைப்பேசிகளில் டிக் டாக் செயலியை இன்று (ஜன.19) பயன்படுத்த முனையும் அமெரிக்கர்களுக்கு ஒரு செய்தி காட்டப்படுகிறது. அதில்,
`டிக் டாக் தற்போது பயன்பாட்டில் இல்லை. டிக் டாக்கை தடை செய்யும் வகையிலான சட்டம் அமெரிக்காவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் துரதிஷ்டவசமாக தற்போது உங்களால் டிக் டாக்கைப் பயன்படுத்த முடியாது.
பதவியேற்றவுடன் டிக் டாக்கை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிர்ஷடவசமாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். காத்திருங்கள்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளை (ஜன.20) அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்க உள்ளார் டொனால்ட் ட்ரம்ப். இந்த நிகழ்வை முன்வைத்து நேற்று (ஜன.18) என்சிபி நியூஸுக்குப் பேட்டியளித்த டிரம்ப், ஓர் ஒப்பந்தத்தை எட்டும் வகையில் டிக் டாக்கிற்கு 90 நாட்கள் அவகாசம் அளிக்கும் திட்டம் உள்ளதாகத் தெரிவித்தார்.
டிக் டாக் செயலியின் பயன்பாடு அமெரிக்காவில் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அதன் அமெரிக்கப் பயனர்களுக்குத் தங்களின் கணக்கை மூடுவதற்கான வசதியை வழங்குகிறது அந்நிறுவனம். அத்துடன் டிக் டாக்கில் இருந்து தங்களின் தரவுகளைப் பதிவிறக்கம் செய்யும் வகையிலான வசதிகளும் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.