கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையிலிருந்து சென்ற விமானத்தில் பயங்கரவாதிகள்?: இலங்கையில் கடும் சோதனை

சென்னையிலிருந்து கொழும்பு சென்ற இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் யுஎல் 122 இன்று (மே 3) காலை 11.59 மணியளவில் சென்றடைந்தது.
Published on

சென்னையிலிருந்து கொழும்பு சென்ற விமானத்தில் பயங்கரவாதிகள் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கடும் சோதனை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த மாதம் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தார்கள். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தாக்குதலுக்குத் தொடர்புடைய பயங்கரவாதிகள் தேடப்பட்டு வருகிறார்கள். இதனிடையே, சென்னையிலிருந்து இலங்கை சென்ற விமானத்தில் பஹல்காம் தாக்குதலுக்குத் தொடர்புடைய பயங்கரவாதிகள் பயணம் மேற்கொண்டிருக்கலாம் என்று கிடைத்த தகவலையடுத்து, கொழும்பு விமான நிலையத்தில் சோதனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையிலிருந்து கொழும்பு சென்ற இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் யுஎல் 122 இன்று (மே 3) காலை 11.59 மணியளவில் சென்றடைந்தது. இந்தியாவில் தேவைப்பட்டு வரும் சந்தேகத்துக்குரிய நபர் இந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டிருக்கலாம் என சென்னை பகுதி கட்டுப்பாட்டு மையத்திலிருந்து தகவல் சென்றுள்ளது.

இதன் அடிப்படையில் கொழும்பு விமான நிலையத்தில் சென்னையிலிருந்து சென்ற விமானத்தில் கடுமையான சோதனை நடைபெற்று வருகிறது. விமானம் முழுமையாகச் சோதனையிட்டபிறகு, மேற்கொண்டு செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், பாதுகாப்புக்கான கட்டாய நடைமுறை காரணமாக, அடுத்த விமான சேவை தாமதமாகியுள்ளது.

இலங்கை ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் சந்தேகிக்கும் நபர் என்று மட்டுமே அதிகாரபூர்வமாகக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்குத் தொடர்புடையவர்கள் இதில் பயணம் மேற்கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி அதிகாரபூர்வமாக எதுவும் வெளியாகாத நிலையில், சமூக ஊடகங்களில் பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளுடன் தொடர்புபடுத்தியே செய்திகள் பரவுகின்றன.

logo
Kizhakku News
kizhakkunews.in