
சீனாவில் தொழிற்சாலைகளை அமைத்து, இந்திய தொழிலாளர்களை வேலையில் அமர்த்துவதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களை அந்நாட்டு அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
குறிப்பாக, தன்னுடைய ஆட்சியில், `அந்த நாள்கள் முடிந்துவிட்டன’ என்று குறிப்பிட்டு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில், அது தொடர்பான மூன்று நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்ட அதிபர் டிரம்ப், இத்தகைய கருத்துக்களை தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதற்கான வெள்ளை மாளிகை செயல் திட்டமும் இந்த உத்தரவில் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பேசிய டிரம்ப், `அமெரிக்க தொழில்நுட்பத் துறையின் பெரும்பகுதி நீண்ட காலமாக தீவிரமான உலகமயமாக்கலை பின்பற்றியது, இது லட்சக்கணக்கான அமெரிக்கர்களை நம்பிக்கையற்றவர்களாக மாற்றி, துரோகத்தை உணர வைத்தது’ என்றார்.
மேலும், `நமது மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பல சீனாவில் தொழிற்சாலைகளை நிர்மாணித்தபோதும், இந்தியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியபோதும், அயர்லாந்தில் லாபத்தைக் குறைத்தபோதும், அமெரிக்க சுதந்திரத்தின் பலனை அறுவடை செய்துள்ளன என்பது உங்களுக்குத் தெரியும்.
அதேநேரம் சக குடிமக்கள் இங்கு உள்நாட்டிலேயே பணிநீக்கம் செய்யப்பட்டு தடை செய்யப்படுகிறார்கள். அதிபர் டிரம்பின் கீழ், அந்த நாள்கள் முடிந்துவிட்டன’ என்று அவர் கூறினார்.
அமெரிக்காவிற்கே ஆதரவளிக்கவேண்டும்
`செயற்கை நுண்ணறிவு பந்தயத்தில் வெற்றி பெறுவது சிலிக்கான் பள்ளத்தாக்கிலும் சிலிக்கான் பள்ளத்தாக்கிற்கு அப்பாலும் ஒரு புதிய தேசபக்தி உணர்வு மற்றும் தேசிய விசுவாசத்தைக் கோரும்.
அமெரிக்காவிற்கு ஆதரவாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் முழுமையாக இருக்கவேண்டும். நீங்கள் அமெரிக்காவை முதன்மைப்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் அதைச் செய்ய வேண்டும். நாங்கள் கேட்பது அவ்வளவுதான்’ என்றார்.