
தோட்டாக்களை உபயோகிக்காமல், வர்த்தகத்தை வைத்து இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவி வந்த போர் பதற்றம் மற்றும் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆபரேசன் சிந்தூருக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்று வந்த பரஸ்பர தாக்குதல்களை வர்த்தகத்தை வைத்து நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் முன்னதாக கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று (மே 30) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் கூறியதாவது,
`நான் மிகவும் பெருமைப்படும் ஒப்பந்தம் என்னவென்றால், நாங்கள் இந்தியாவை கையாண்டோம், பாகிஸ்தானையும் கையாண்டோம், சாத்தியமுள்ள அணு ஆயுதப் போரை, தோட்டாக்கள் மூலம் அல்லாமல் வர்த்தகம் மூலமாக நிறுத்த முடிந்தது... பொதுவாக அவர்கள் அதை தோட்டாக்கள் மூலம் செய்வார்கள்.
நாங்கள் அதை வர்த்தகம் மூலம் செய்கிறோம். அதனால் நான் அதைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன். யாரும் அது குறித்து பேசுவது இல்லை. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு மோசமான போர் நடப்பதற்கான வாய்ப்பு இருந்தது. இப்போது, நீங்கள் பாருங்கள், அவர்கள் நன்றாக இருக்கிறார்கள்’ என்றார்.
முன்னதாக வெள்ளை மாளிகையில் வைத்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,
`இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையிடுவதை நாங்கள் தடுத்து நிறுத்தினோம். அது ஒரு அணுசக்தி பேரழிவாக மாறியிருக்கலாம் என்று நான் நம்புகிறேன், மேலும் (இதற்காக) இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், எனது மக்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
மேலும், நாங்கள் வர்த்தகம் குறித்து பேசினோம், பரஸ்பரம் துப்பாக்கிச் சூடு நடத்துபவர்களுடனும், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடியவர்களுடனும் நாங்கள் வர்த்தகம் செய்ய முடியாது என்று கூறினோம். அவர்கள் அந்த நாடுகளின் சிறந்த தலைவர்கள், (அதை) புரிந்துகொண்டு ஒப்புக்கொண்டனர்.
யாரையும் விடவும் நாங்கள் சிறப்பாகப் போரிட முடியும், உலகின் மிகப்பெரிய இராணுவம் எங்களிடம் உள்ளது என்பதால், மற்றவர்கள் சண்டையிடுவதை நாங்கள் தடுத்து நிறுத்துகிறோம்’ என்றார்.
அதேநேரம் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்று வந்த தாக்குதலை நிறுத்தியதில் வெளிநாடுகளின் தலையீடு இல்லை; அது முழுக்க முழுக்க இந்தியாவின் முடிவு மட்டுமே என்று இந்த விவகாரம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே விளக்கமளித்தது.