அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (கோப்புப் படம்)
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (கோப்புப் படம்)ANI

பதிலடி ஆரம்பம்: ஈராக், சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்

அமெரிக்காவின் இத்தாக்குதலுக்கு ஈராக் ராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Published on

கடந்த ஞாயிறன்று, ஜோர்டான் நாட்டின் வடகிழக்குப் பகுதியில், சிரியாவின் எல்லைக்கு அருகில் நடந்த ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டார்கள், 25 வீரர்கள் காயமடைந்தார்கள். இதை உறுதிப்படுத்தியது அமெரிக்க ராணுவம். இதற்குக் கண்டனம் தெரிவித்த அதிபர் ஜோ பைடன், ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுக்கள் இதைச் செய்துள்ளன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்திய பிறகு மத்தியக் கிழக்குப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 25,000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளார்கள். பயங்கரவாதக் குழுக்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈராக், சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களில் 90 முறை தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. முதல்முறையாக ஜோர்டான் எல்லையில் நடைபெற்ற தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் இறந்துள்ளார்கள்.

இந்நிலையில் 5 நாள்கள் கழித்து, ஈரான் மற்றும் சிரியாவில் பயங்கரவாத இயக்கங்களின் 85 இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது அமெரிக்கா. கட்டுப்பாட்டு, உளவுத்துறை மையங்கள், வெடிமருந்துச் சேமிப்புத் தளங்கள் எனப் பல இடங்களில் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. மோசமான வானிலை காரணமாகவே சில நாள்கள் பொறுத்திருந்ததாகத் தெரிகிறது. இத்தாக்குதலால் சிரியாவில் ஈரான் ஆதரவுப் போராளிகள் 18 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களுடைய பதில் தாக்குதல் இன்று தொடங்கியுள்ளது. நீங்கள் ஒரு அமெரிக்கருக்குத் தீங்கு செய்தால் நாங்கள் அதற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்றார்.

அமெரிக்காவின் இத்தாக்குதலுக்கு ஈராக் ராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in