2025-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினா மச்சோடாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலா மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை ஊக்கப்படுத்த ஓயாது பணியாற்றியதற்காக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சோடாவுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மரியா கொரினா மச்சோடாவின் அயராத உழைப்பால், அங்கு நிலவி வந்த சர்வாதிகாரப்போக்கு ஜனநாயகத்துக்கு மாறியுள்ளது.
நோபல் பரிசு குழு சார்பில் மச்சோடா பற்றி குறிப்பிட்டுள்ளதாவது:
"கடந்தாண்டு தலைமறைவாக வாழக்கூடிய சூழலுக்கு மச்சாடோ தள்ளப்பட்டார். உயிருக்குப் பல்வேறு அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், அவர் வெனிசுலாவைவிட்டு வெளியேறவில்லை. இவருடைய முடிவு லட்சக்கணக்கான மக்களைக் கவர்ந்தது. அந்நாட்டு எதிர்க்கட்சியினரை ஒருங்கிணைத்தார். வெனிசுலா ராணுவமயம் ஆவதை எதிர்ப்பதில் அவர் துளியும் பின்வாங்கவில்லை. அமைதியான முறையில் ஜனநாயகத்துக்கு நாடு திரும்ப வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார் மச்சோடா" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளுக்கிடையிலான போர்களை நிறுத்தியதால் அமைதிக்கான நோபல் பரிசைத் தனக்கு வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்தார். மேலும் பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என ஆதரவுக் குரல் எழுப்பி வந்தார்கள். இருந்தபோதிலும், அமைதிக்கான நோபல் பரிசானது டிரம்புக்கு வழங்கப்படவில்லை.
இதற்கு முன்பு 1906-ல் தியோடோர் ரூஸ்வெல்ட், 1919-ல் வூட்ரோவ் வில்சன், 2009-ல் பாரக் ஒபாமா ஆகியோர் அமெரிக்க அதிபர்களாக இருந்தபோது, நோபல் பரிசை வென்றுள்ளார்கள். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜம்மி கார்டெர் 2002-ல் நோபல் பரிசை வென்றார். முன்னாள் துணை அதிபர் ஏஐ கோர் 2007-ல் நோபல் பரிசை வென்றார்.
Nobel Peace Prize | The Nobel Prize |