டெலிகிராம் செயலியின் இணை நிறுவனரும், அதன் தலைமை செயல் அதிகாரியுமான ரஷ்யாவைச் சேர்ந்த பாவெல் துரோவ், பிரான்ஸ் நாட்டின் போர்கெட் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
39 வயதான பாவெல் துரோவ் அஸர்பைஜான் நாட்டில் இருந்து கிளம்பி தனி விமானம் மூலம் இன்று (ஆகஸ்ட் 25) பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸுக்கு அருகே உள்ள போர்கெட் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளார். அதன் பிறகு பாரிஸ் நகர காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
பிரான்ஸில் சிறார்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் வகையில் செயல்படும் OFMIN அமைப்பு துரோவுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டின் AFP செய்தி நிறுவனம் முதற்கட்ட தகவலை வழங்கியுள்ளது. துரோவிடம் பிரான்ஸ் நாட்டுக் குடியுரிமையும் உள்ளது.
டெலிகிராம் செயலியில் ஒரு குழுவில் அதிகபட்சம் 2 லட்சம் பேர் வரை உறுப்பினர்களாக இருக்கலாம். இந்த செயலியில் பயனாளர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில், கன்டெண்ட் மாடரேட்டர் இல்லாததால், இதன் வழியாகத் தடையில்லாமல் குற்றச்செயல்கள் நடைபெற்று வருகின்றன என்பதும் அவர் கைதுக்கான காரணமாகக் கூறப்படுகிறது.
2013-ல் பாவெல் துரோவும், அவரது சகோதரர் நிகோலாய் துரோவும் உருவாக்கிய டெலிகிராம் மெசெஞ்சர் செயலிக்கு கிட்டத்தட்ட நூறு கோடி அளவிலான பயனர்கள் தற்போது உள்ளனர். ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் இந்த செயலி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.