

வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்று தாரிக் ரஹ்மானின் வங்கதேச தேசியவாதக் கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த 2024-ல் நடந்த மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்குப் பிறகு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நேற்று (பிப். 12) நடைபெற்றது. அந்நாட்டில் மொத்தமுள்ள 350 நாடாளுமன்ற தொகுதிகளில், 300 தொகுதிகளுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு தொகுதியில் வேட்பாளர் மறைந்த நிலையில் தேர்தல் ரத்தானது. மீதமுள்ள 299 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது.
வங்கதேச நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்
வங்கதேசத்தில் ஆட்சியமைக்க 151 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவை. இந்தத் தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சிக்கும் (பிஎன்பி), ஜமாத் ஏ இஸ்லாமி கட்சிக்கும் இடையில் நேரடி போட்டி நிலவியது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவரது அவாமி லீக் கட்சிக்குத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று நாடு முழுவதும் 42,779 வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது. அதில் சுமார் 60% வாக்குகள் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஒட்டுமொத்தமாக வங்கதேச தேசியவாதக் கட்சி 209 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அந்நாட்டில் வங்கதேச தேசியவாதக் கட்சி ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது. அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் அடுத்த பிரதமராக விரைவில் பதவியேற்கவுள்ளார்.
யார் இந்த தாரிக் ரஹ்மான்
வங்கதேச தேசியவாதக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஜியாவுர் ரஹ்மானுக்கும், அந்நாட்டின் முதல் பெண் பிரதமரான கலீதா ஜியாவுக்கும் பிறந்தவர்தான் தாரிக் ரஹ்மான். 1981-ல் ஜியாவுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்ட பின் அவரது மனைவி கலீதா ஜியா அரசு பொறுப்பேற்றார்.1991 - 96 மற்றும் 2001 - 06 காலகட்டத்தில் கலீதா ஜியா பிரதமராகப் பதவி வகித்தார். அவரது ஆட்சிக் காலத்தில் அரசின் முக்கிய முடிவுகளை தாரிக் ரஹ்மான் எடுத்தார் என்று கூறப்படுகிறது. அதனாலேயே அவர் டார்க் பிரின்ஸ் (நிழல் இளவரசர்) என்று அரசியல் கட்சிகளால் அழைக்கப்பட்டார். 2007-ல் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவைக் கொலை செய்ய முயன்றது என்பது உள்ளிட்ட பல வழக்குகளில் தாரிக் கைது செய்யப்பட்டார். சுமார் 17 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தாரிக் ரஹ்மான், மருத்துவக் காரணங்களுக்காக ஜாமின் வழங்கப்பட்டு, பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 30 அன்று கலீதா ஜியா உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து 17 ஆண்டுகள் கழித்து வங்கதேசம் திரும்பிய தாரிக் ரஹ்மான், வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவுக்குப் பிறகு அமைந்த இடைக்கால அரசு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது. இதையடுத்து தேர்தலில் போட்டியிட்ட தாரிக் ரஹ்மான், பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டார். அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என்று வாக்குறுதி அளித்தார். இஸ்லாமியர், ஹிந்துகள், பௌத்தர்கள், கிறிஸ்துவர்கள் என அனைவரையும் உள்ளடக்கிய பாதுகாப்பான தேசத்தை உருவாக்குவேன் என்றும் உறுதி அளித்தார்.
தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் புகுரா தொகுதியில் போட்டியிட்ட தாரிக் ரஹ்மான், 2.16 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சி வேட்பாளர் அபிதுர் ரஹ்மான் 97, 626 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். இதையடுத்து வங்கதேச தேசியவாதக் கட்சியினர் இந்த வெற்றியைக் கொண்டாடி வருகிறனர்.
பிரதமர் மோடி வாழ்த்து
வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளதாவது:-
“வங்கதேச தேசியவாதக் கட்சியை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை நோக்கிக் கொண்டு சென்ற தாரிக் ரஹ்மானுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகள். வங்கதேச மக்களுக்கு தங்கள் மீதுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாக இந்த முடிவுகள் உள்ளன. வங்கதேசத்திற்கு இந்தியா தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும். நமது பன்முக உறவை மேலும் வலுப்படுத்தவும், நமது பகிரப்பட்ட வளர்ச்சி இலக்குகளை முன்னேற்றவும் உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் தாரிக் ரஹ்மானுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியதாவதும் பதிவிட்டுள்ளார்.
“தாரிக் ரஹ்மானுடன் பேசியதில் மகிழ்ச்சி. வங்கதேசத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றதற்காக அவரை வாழ்த்தினேன். வங்கதேச மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் அவரது முயற்சிக்கு எனது வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்துக் கொண்டேன். ஆழமான வரலாற்று மற்றும் கலாசார உறவுகளைக் கொண்ட இரண்டு நெருங்கிய நாடுகளாக, நமது இரு மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான இந்தியாவின் தொடர் உறுதியை மீண்டும் தெரியப்படுத்தினேன்” என்று கூறியுள்ளார்.
Tarique Rahman's Bangladesh Nationalist Party has secured a majority in the Bangladesh elections and is set to form the government. Tarique Rahman to be sworn as next prime minister of Bangladesh soon.