
NATO Chief warns India: அமைதிப் பேச்சுவார்த்தையை தீவிரமாக எடுத்துக்கொள்ளும்படி ரஷ்ய அதிபர் புதினிடம் வலியுறுத்துமாறும் இல்லையென்றால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என்றும் பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு நேட்டோ அமைப்பின் தலைவர் மார்க் ருட்டே எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் செனட் சபை எம்.பி.க்களை இன்று (ஜூலை 16) சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் ரூட்டே. அப்போது, சமாதானப் பேச்சுவார்த்தைகளை தீவிரமாக எடுத்துக்கொள்ளுமாறு ரஷ்ய அதிபர் புதினிடம் வலியுறுத்தும்படி பெய்ஜிங், தில்லி மற்றும் பிரேசிலியாவில் இருக்கும் தலைவர்களுக்கு அவர் தகவல் கூறினார்.
"நீங்கள் சீனாவின் அதிபராகவோ, இந்தியப் பிரதமராகவோ அல்லது பிரேசில் அதிபராகவோ இருந்துகொண்டு ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு அவர்களின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கினால் உங்களுக்குத் தெரியும், மாஸ்கோவில் உள்ள நபர் (புதின்) சமாதானப் பேச்சுவார்த்தைகளை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால், நான் 100% இரண்டாம் கட்ட (பொருளாதாரத்) தடைகளை விதிப்பேன்’ என்றார் ரூட்டே.
மூன்று நாடுகளின் தலைவர்களும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை தீவிரமாக எடுத்துக்கொள்ளுமாறு புதினிடம் வலியுறுத்தும்படி ரூட்டே அழைப்பு விடுத்தார்.
`எனவே தயவுசெய்து தொலைபேசியில் விளாதிமிர் புதினுக்கு அழைப்பு விடுத்து, அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அவர் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்பதை வலியுறுத்துங்கள், இல்லையென்றால் இது பிரேசில், இந்தியா மற்றும் சீனா மீது மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்றார்.
ராணுவ ரீதியில் உக்ரைனுக்கான ஆதரவை அறிவித்து, ரஷ்யா மற்றும் அந்நாட்டுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தல் வெளியாகிய ஒரு நாளுக்குப் பிறகு நேட்டோ அமைப்பின் தலைவர் இத்தகைய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு உதவியளிக்க முன்மொழியப்பட்டுள்ள டிரம்பின் திட்டத்தின்படி பேட்ரியாட் ஏவுகணை போன்ற மேம்பட்ட ஆயுதங்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ரஷ்யா மேற்கொள்ளும் வான் தாக்குதல்களை எதிர்கொள்ள இத்தகைய ஆயுதங்கள் அவசியமானது என்று உக்ரைன் கருதுகிறது.