வழுக்கைத் தலையில் 20 நாள்களில் முடி வளருமா?: ஆர்வத்தை ஏற்படுத்தும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு

எலிகளின் மீது நடத்தப்பட்ட சோதனை வெற்றியான நிலையில் மனிதர்கள் மீது சோதிக்கப்பட வாய்ப்பு...
வழுக்கையில் 20 நாள்களில் முடி வளரும் சீரம் கண்டுபிடிப்பு? (மாதிரிப் படம்)
வழுக்கையில் 20 நாள்களில் முடி வளரும் சீரம் கண்டுபிடிப்பு? (மாதிரிப் படம்)Envato
2 min read

தலையில் வழுக்கை ஏற்பட்ட பகுதியில் 20 நாள்களில் முடி வளர வைக்கும் புதிய சீரத்தைக் கண்டுபிடித்துள்ளதாக தைவான் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள்.

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் கொழுப்பு அமில வளர்சிதை மாற்றத்தின் மூலம் புறத்தோல் ஸ்டெம் செல்களைத் தூண்டி முடி வளர வைப்பது குறித்த ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அதன் முடிவில், இயற்கையான முறையில் புறத்தோலின் கொழுப்பு அமில செல்களைத் தூண்டி முடி வளர வைப்பது சாத்தியம் என்று கண்டுபிடித்துள்ளார்கள்.

மனித உடலில் காயம்பட்ட இடங்களில் கொழுப்பு அமில செல்களின் வளர்சிதை மாற்றம் ஏற்பட்டு புதிய முடி முளைப்பதைக் கண்ட விஞ்ஞானிகள், அதன் அடிப்படையில் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அதன்மூலம் வழுக்கை விழுந்த பகுதிகளில் உள்ள கொழுப்பு அமில செல்களின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டும் இயற்கை சீரம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதனை முழுவதும் வழுக்கையான எலிகளின் மீது சோதனை செய்தபோது குறைந்த நாள் இடைவெளில் அடர்த்தியான முடி வளர்ந்துள்ளது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் முடி வளரும் சிகிச்சையில் புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இருக்கும் சிகிச்சை முறைகளில் ரத்த ஓட்டத்தின் மூலம் முடி வளர்ச்சியைத் தூண்டும் மினாக்ஸிடில், பைனாஸ்டெரைடு போன்ற மருந்துகளும், ஹார்மோன் சமன்பாடு மூலம் முடி வளர்ச்சியை உருவாக்கும் முறைகளுமே பிரபலமாக உள்ளன. இதை விட்டால், முடி மாற்று அறுவை சிகிச்சை போன்ற வலி நிறைந்த, அதிக பரமாரிப்பு மிக்க சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்நிலையில், உயிரினங்களில் இயல்பாக காணப்படும் ஓலிக் மற்றும் பால்மிடோலெய்க் கொழுப்பு அமிலங்களைக் கொண்டு உருவாக்கப்படும் இந்த சீரம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த அமிலங்கள் மனிதர்கள் அன்றாடம் உட்கொள்ளும் ஆலிவ் எண்ணெய், பருப்பு வகைகளில் அதிகம் காணப்படுகிறது. மேலும், இது பயன்படுத்த பாதுகாப்பானது என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த புதிய சீரம் மூலம் 20 நாள்களில் வழுக்கைப் பகுதிகளில் முடி வளர வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஆனால் அது ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை. மேலும் இதுவரை இந்த சீரத்தின் சோதனை எலியின் தோலில் மட்டுமே வெற்றி அடைந்துள்ளதால், மனித சோதனையின் முடிவில்தான் இதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து தெரியவரும் என்கிறார்கள். தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானி ஒருவர் தனது தொடையில் இந்த சீரத்தைப் பயன்படுத்தி முடிவளர்ச்சியைக் கண்டிருக்கிறார். ஆனால் சுயபரிசோதனை அதிகாரப்பூர்வமாக எடுத்துக் கொள்ளப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, தற்போதைக்கு மருந்தின் பார்முலாவுக்குக் காப்புரிமை பெற்றுள்ள விஞ்ஞானிகள் குழு, விரைவில் மனிதர்கள் மீது சோதனை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய கண்டுபிடிப்பு குறித்த செய்தி, தலைமுடி உதிர்வு, வழுக்கை பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Summary

The National Taiwan University (NTU) scientists, led by Professor Sung-Jan Lin, have gained attention for developing a topical serum that showed the ability to regrow hair in laboratory mice within approximately 20 days.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in