அமெரிக்காவில் குறைந்துவரும் கிறிஸ்துவர்கள் எண்ணிக்கை: ஆய்வில் தகவல்!

2007-ல் 0.4 சதவீதமாக இருந்த ஹிந்துக்கள் எண்ணிக்கை, தற்போது 0.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் குறைந்துவரும் கிறிஸ்துவர்கள் எண்ணிக்கை: ஆய்வில் தகவல்!
1 min read

கிறிஸ்துவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் குறைந்துவருவதாக தனியார் ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்க மக்களிடையே நிலவி வரும் மத நம்பிக்கை தொடர்பான தகவல்கள், அந்நாட்டு அரசு நடத்தும் மக்கள்தொகை கணக்கீட்டில் பதிவு செய்யப்படுவதில்லை. இந்நிலையில் அமெரிக்கர்களின் மத நம்பிக்கை தொடர்பான கணக்கெடுப்பை பியூ ஆய்வு மையம் நடத்தியது.

கடந்த 17 வருடங்களில் இந்த கணக்கெடுப்பை மூன்று கட்டங்களாக பியூ ஆய்வு மையம் நடத்தியுள்ளது. அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்த கணக்கெடுப்பின் முடிவில், பல்வேறு முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடைசியாக 2023-24 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், 62 சதவீத அமெரிக்கர்கள் தங்களை கிறிஸ்துவர்களாக அடையாளப்படுத்தியுள்ளார்கள். 2014-ல் இந்த எண்ணிக்கை 71 சதவீதமாக இருந்துள்ளது. அதுவே 2007-ல் சுமார் 78 சதவீத அமெரிக்கர்கள் தங்களை கிறிஸ்துவர்களாக அடையாளப்படுத்தியுள்ளார்கள்.

மேலும், 2007-ல் அந்நாட்டு மக்கள் தொகையில் கிறிஸ்துவர்கள் அல்லாதோர் எண்ணிக்கை 4.7 சதவீதமாக இருந்தது. கடைசி கட்ட கணக்கெடுப்பில் (2023-24) இந்த எண்ணிக்கை 7.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2007-ல் 0.4 சதவீதமாக இருந்த ஹிந்துக்கள் எண்ணிக்கை, தற்போது 0.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

2019-ல் இருந்து அமெரிக்க மக்கள்தொகை நிலையாகவுள்ளதாக இந்த கணக்கெடுப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தோராயமாக 29 சதவீத அமெரிக்கர்கள் தங்களை எந்த மதத்துடனும் தொடர்புபடுத்திக்கொள்ளவில்லை.

இதில், 5 சதவீத அமெரிக்கர்கள் தங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றும், 6 சதவீத அமெரிக்கர்கள் கடவுள் இருப்பது குறித்து தங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in